நெய்மர் மீதான முறைகேடு வழக்கை கைவிட்டது ஸ்பெயின் நீதிமன்றம்
முன்னணி கால்பந்து வீரரான நெய்மர் பார்சிலோனா அணிக்கு மாற்றல் ஆகும்போது முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஸ்பெயின் உயர்நீதிமன்றம் கைவிட்டுள்ளது.
24 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான நெய்மர் உலகளவில் உள்ள தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானா ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நெய்மர் பிரேசிலில் உள்ள சான்டோஸ் கிளப்பிற்காக விளையாடினார். அப்போது பிரேசிலைச் சேர்ந்த DIS என்ற முதலீட்டுக்குழு நெய்மரின் 40 சதவீத விளையாட்டு உரிமையை வைத்திருந்தது.
இந்த சமயத்தில் பார்சிலோனா அணி சான்டோஸ் அணியிடம் இருந்து சுமார் 57.1 மில்லியன் யூரோவிற்கு நெய்மரை வாங்கியது. அப்போது நெய்மரின் குடும்பத்திற்கு 40 மில்லியன் யூரோ கொடுக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் நெய்மரின் உண்மையான விலை எவ்வளவு என்பதை இரு கிளப்புகளும் மறைத்துவிட்டன. இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று DIS ஸ்பெயினில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நெய்மரின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகி முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று தன் வாதத்தை முன்வைத்தார்.
இதற்கிடையில் வரிஏய்ப்பில் இருந்து தப்பிக்க பார்சிலோனா நிர்வாகம் 5.5 மில்லியன் யூரோவை அபராதமாக செலுத்த முன்வந்தது.
இந்நிலையில் ஸ்பெயின் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து நீதிபதி கூறுகையில், இந்த வழக்கு விளையாட்டு, நன்னடத்தை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், இதை குற்றவியல் நீதிமன்றத்திற்குள் கொண்டு வரமுடியாது என்று கூறினார்.