நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் நடக்கும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்களால், மக்களுக்கு ஏற்படும்பாதிப்புகள் குறித்து, சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியிட்டுவந்த சேவ் நெடுவாசல், சேவ் கதிராமங்கலம் உள்ளிட்ட ஃபேஸ்புக் பக்கங்களை இயக்கி வந்த புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை அடுத்த நாடியம் கிராமத்தைச் சேர்ந்த நிமல் என்பவரது ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி மத்திய அரசு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும் என அறிவித்ததிலிருந்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நெடுவாசல் குறித்தும் முதன்முதலில் #SAVENEDUVASAL எனும் ஹேஸ்டாக்கை உருவாக்கி பிரபலப்படுத்தியதுடன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், சமூக ஆர்வலர்களை நெடுவாசல் குறித்து பேச வைத்து, நெடுவாசலில் நடந்த முதல் 22 நாள்கள் போராட்டம் மற்றும் அடுத்து கடந்த 100 நாள்களாக மேலாக நடந்துவரும் நெடுவாசல் போராட்டங்கள் மற்றும் #SAVEKATHIRAMANGALAM எனும் ஹேஸ்டாக்கை உருவாக்கி கதிராமங்கலம்போராட்டத்தை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்திய இந்தப் பக்கங்கள், நெடுவாசல் போராட்டத்தின் 100 வது நாளான கடந்த நேற்று முன்தினம் முடக்கப்பட்டிருப்பது, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து நிமலிடம் தொடர்புகொண்டோம், “கதிராமங்கலத்தில் காசு வாங்கிக்கொண்டு செயல்பட்ட தாசில்தார் ஒருவர் குறித்து ‘கதிராமங்கலத்தின் கறுப்பு ஆடு’ என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டேன். அப்போது சிலர் ரிப்போர்ட் கொடுத்தனர். 3 லட்சம் பேர் பார்த்து ஷேர் செய்யும் வீடியோவை 200 பேர் ரிப்போர்ட் செய்வதால் ஒன்றும் ஆகாது என்று நான் அதை விட்டுவிட்டேன். அதன் தொடர்ச்சியாகதான் என்னுடைய ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தினசரி பல்வேறு தகவல்களைப் பதிந்து வந்தேன். அங்குள்ள கள நிலவரத்தை அப்டேட் செய்து வந்தேன். தற்போது முடக்கப்பட்டுள்ளதால் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியிவில்லை” என்றார்.
சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பது குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் சமூகப் பிரச்னைகளுக்காக இயங்கும் ஃபேஸ்புக் பக்கங்களை முடக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.