யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் உள்ளதாக வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பகுதியில் குதிரைகள் இறப்பதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான வழிமுறைகளைக் கண்டறிவதற்கு, வடமாகாண முதலமைச்சரால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையிலான குறித்த குழுவில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், வை.தவநாதன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பிரதேச சபை செயலாளர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் குறித்த குழுவினர் நெடுந்தீவு சென்று குதிரைகளின் வாழ்விடத்தைப் பார்வையிட்டதோடு, பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றையும் நடாத்தியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் குதிரைகளைப் பாதுகாத்தல், குதிரைகளுக்கு தேவையான உணவு, நீர் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில் ஐங்கரநேசன் தலைமையிலான குழுவினர் நெடுந்தீவு குதிரைகளை பாதுகாப்பதற்கான தீர்வுத் திட்டங்களை உள்ளடக்கிய தமது அறிக்கையை இரண்டு வார காலத்தில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.