நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டனத்தில் இருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் 1000க்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடலுக்கு சென்று கச்சத்தீவுக்கும் – நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு 3 ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்துள்ளனர்.
அதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும், அதில் இருந்த 8 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர்.
தற்போது சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மீது எல்லைத் தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து காங்கேசம் துறை கடற்கரை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பின் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருக்கிறார்கள். ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 80க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில் மீண்டும் இன்று 8 பேர் சிறைபிடிக்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.