நடிகர் | உதயநிதி ஸ்டாலின் |
நடிகை | தான்யா ரவிச்சந்திரன் |
இயக்குனர் | அருண்ராஜா காமராஜ் |
இசை | திபு நினன் தாமஸ் |
ஓளிப்பதிவு | தினேஷ் கிருஷ்ணன் |
சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார் ஐபிஎஸ் அதிகாரியான உதயநிதி. இந்த ஊரில் 2 இளம் பெண்கள் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள். மேலும் ஒரு பெண் காணாமல் போகிறார்.
இந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் உதயநிதிக்கு பல தடங்கல்கள் வருகிறது. தடங்கல்களை கடந்து கொலைக்கான காரணத்தையும் காணாமல் போன பெண்ணையும் உதயநிதி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக விஜயராகவன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து இருக்கிறது. தேவையான இடங்களில் மட்டும் கோபத்தை வெளிக்காட்டும் அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், உதயநிதிக்கு ஊக்குவிக்கும் கதாபாத்திரம். இதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். குமரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆரியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். குறைசொல்ல முடியாத நடிப்பை கொடுத்திருக்கிறார். காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் சுரேஷ் சக்ரவரத்தியின் வில்லத்தனம் கலந்த நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. ஷிவானி ராஜ் சேகர், இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், ராட்சசன் சரவணன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
இந்தியில் வெளியான ‘ஆர்டிக்கிள் 15’ படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக ஒரு சில காட்சிகளை சேர்த்தும், சிலவற்றை நீக்கியும் படமாக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ். சத்துணவு சமைக்கும் பெண் ஒருவர் பட்டிலியன சாதி என்பதால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தியது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பெரியார், அம்பேத்கர் சிலைகள், உண்மைச் சம்பவங்களை ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. கதாபாத்திரங்கள் இடையே அருமையாக வேலை வாங்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பின்னணி இசை, ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகளின் உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது அவரது இசை. அங்காங்கே வரும் பாடல்கள் கவனிக்க வைக்கின்றது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
மொத்தத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ வெல்லும்.