நுவரெலியா – ஹட்டனில் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளன.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் நீதிமன்ற சட்டத்தரணிகள் இந்த பணிபுறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 சட்டத்தரணிகள் வரை கலந்துகொண்டுள்ளனர்.
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது, நாட்டின் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என தெரிவித்த சட்டத்தரணிகள், நீதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரியுள்ளனர்.
இதேவேளை, நீதித்துறைக்கு எதிரான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் என மும்மொழிகளிலும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்.
யாழ் .மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கடந்த 22ஆம் திகதி நல்லூர் – பின் வீதியில் பயணித்த போது அங்கு ஏற்பட்ட சன நெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சியில் நீதிபதியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவரின் துப்பாக்கியை பறித்து மற்றைய பொலிஸார் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், காயமடைந்தவர்களில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான 51 வயதுடைய சரத் பிரேமசந்திர சிகிச்சை பலனின்றி 23ஆம் திகதி காலை உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வடக்கு, கிழக்கிலும் பணிபுறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.