சீனாவில், கடந்த 6 ஆண்டுகளாகக் காய்ச்சலாலும் மூச்சுத் திணறலாலும் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவச் சோதனையில், அவரது நுரையீரலில் 3 செண்டிமீட்டர் நீளமுள்ள மிளகாய்த் துண்டு சிக்கியிருந்தது தெரியவந்தது.
41 வயதான அந்தப் பெண்மணி சென்ற வாரம் மருத்துவமனைக்குச் சென்றபோது அது கண்டுபிடிக்கப்பட்டது.
தலைவலி, மூச்சுத் திணறல் பிரச்சினை பொறுக்கமுடியாமல் அவர் அங்கு சென்றார்.
வலப்புற நுரையீரலில் மிளகாய் சிக்கியிருப்பதை உணர்ந்த மருத்துவர், அதை இடுக்கி கொண்டு எடுத்துவிடலாம் எனத் திட்டமிட்டார்.
ஆனால் நுரையீரலின் கீழ்ப்பகுதி ஏற்கனவே தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த மருத்துவர், அறுவை சிகிச்சை மூலம் மிளகாயை வெற்றிகரமாக வெளியே எடுத்தார்.
சுவாசப் பாதையில் வெளிப்புறப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, ஐந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கு இயல்பு.
ஆனால் பெரியவர்களுக்கு அவ்வாறு நடப்பது அரிது என்றார் மருத்துவர்.
உணவு உட்கொள்ளும்போது அந்த மாது, ஆழ்ந்து சுவாசித்து அந்த மிளகாயை நுரையீரலுக்குள் செலுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
எப்படியோ… மருத்துவரின் திறமையால் மிளகாய் வெளிவந்தது குறித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் சீன மாது.