வடக்கு மாகாணத்தில் நுண் கடன் வழங்கல் செயற்பாடுகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களின் அனுமதிகள் நிறுத்தப்படவேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியிடம் யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதி கள் நேற்று நேரில் வலியுறுத்தினர்.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, வடக்குக்கு இரண்டு நாள்கள் பயணமாக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
திருநெல்வேலியில் உள்ள திண்ணை ஹோட்டலில் அவர் சிறப்புக் கலந்துரையாடல்களை நடத்தினார். இதன்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அரச அதிகாரிகள் நேற்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றனர். மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதி நிறுவனங்களால் வடக்கில் ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
“வடக்கு மாகாணத்தில் இயங்கும் நிதி நிறுவனங்கள் நுண் கடன் என்ற பெயரில் மக்களுக்கு அதிக வட்டிக்குக் கடனை வழங்கி அதனை அறவிடுவதற்காக பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றனர்.
சில நிறுவனங்கள் கடனை மீள அறவீடு செய்வதற்காக வாடிக்கையாளரின் வீட்டுக்கு இரவில் சென்று பெரும் தொல்லை கொடுக்கின்றன.
இதனால் பல குடும்பங்கள் பிரிவைச் சந்தித்துள்ளன. சிலர் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தவறான முடிவை எடுத்து உயிரைத் துறக்கவும் வழி வகுத்துள்ளது. இவ்வாறான நிதி நிறுவனங்களின் அனுமதிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேலும் பிரமிட் வணிகத்தை ஒத்த வியாபாரமும் வடக்கில் மிகப் பெரிய அளவில் இடம்பெறுகின்றது. கேட்டால் அனுமதி உண்டு என்கின்றனர். அதனால் குறித்த வியாபாரத்தை பொலிஸாரும் கட்டுப்படுத்துவதில்லை” என்று பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்திய வங்கி ஆளுநரிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
“வடக்கின் பொருளாதார மேம்பாடு குறித்து அரசு கரிசனையோடு உள்ளது.போரின் பின்பான அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.அந்தவகையிலே வடக்கில் நிதி சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.நிதி நிறுவனங்கள் மீது உடன் நடவடிக்கை எடுப்பது இந்தப் பயணத்தின் நோக்கம் அல்ல. ஆனால் வடக்கு மக்கள் மீதான கடன் சுமை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் மக்களிடையேயான நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பல விடயங்களை திட்டமிடலோடு முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கு அரச திணைக்களங்களின் அதிகபட்ச உதவி தேவை. மக்களுக்கு நிதி கையாளுகை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளின் தேவைப்பாடு உணரப்பட்டுள்ளது. அது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். மிரமிட் வணிகத்தை ஒத்த வகையில் இடம்பெறும் வியாபாரம் தொடர்பில் உடனடியாகவே பொலிஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்தார்.