நீர் கட்டணம் செலுத்துவதற்காக ஒருமாத காலம் நிவாரண வழங்குதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் நீர் கட்டணம் செலுத்துவதற்கு நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமத்தை தவிர்ப்பதற்காக எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட் மற்றும் நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடு காரணமாக குடிநீர் நுகர்வோருக்கு நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு முடியாத நிலைமை இருக்கலாம்.
அதனால் நுகர்வோரின் சிரமத்தை கருத்திற்கொண்டு கட்டண நிவாரண காலம் ஒன்றை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.
அதன் பிரகாரம் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர், நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஒரு மாத காலம் வரையான நிவாரண காலத்தை வழங்க நடவடிக்கை எடுப்போம். அத்துடன் இந்த காலப்பகுதியில் சிலருக்கு நீர் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமையும் இருக்கலாம்.
அதனால் நீர் கட்டணம் செலுத்த முடியாமல்போனவர்களது நீர் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது. அவ்வாறானவர்கள் தொடர்பாகவும் நாங்கள் அவதானம் செலுத்துவோம்.
அதேபோன்று கொராேனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய காரணத்துக்காக, தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்காகவும் நீர் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.