நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி ஒரு தீவிர பிரசாரத்தை ஓகஸ்ட்டில் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், வரும் காலங்களில் இது போன்ற பற்றாக்குறை ஏற்படாமல் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஓகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் இந்த பிரசார நடவடிக்கை ஒரு மாதகாலத்திற்கு இடம்பெறும் என முதலமைச்ச்ர அறிவித்துள்ளார்.
சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110ஆவது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தீவிர நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக தொடங்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
இந்த மக்கள் இயக்கத்தில், மழை நீர் சேகரித்தல், நீர் நிலைகளைப் பாதுகாத்து அதன் கொள் திறனை அதிகரித்தல், நிலத்தடி நீரை செறிவூட்டி குடிநீர் வழங்குதலை நிலைப்படுத்துதல், வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, மானாவாரி வேளாண்மைக்காக மழை நீர் சேகரிக்கும் திட்டத்தையும் செயற்படுத்துதல், பயன்படுத்தப்பட்ட நீரினை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நன்னீருக்கான தேவையை குறைத்தல், இதன்மூலம் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி கோட்பாட்டினை தீவிரமாக கடைபிடித்தல், ஆறுகள், முக்கிய கடற்கரை பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கு, வல்லுநர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பொறியாளர்கள் கொண்ட குழுவின் ஆலோசனையுடன் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் மறுசீரமைப்புக் கழகத்தின் மூலம் உரிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு செய்படுத்தப்படும்.
இச்செயற் திட்டம் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையேற்று, அவர்களின் கீழுள்ள பலதரப்பட்ட துறைகளின் உதவியுடன் செயற்படுத்தப்படும். கீழ் மட்டத்தில் நகர்ப் பகுதிகளில், கிராமங்கள், ஒன்றியங்களில் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் பெருவாரியாக கலந்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த இயக்கத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி, பொது மக்களின் பங்களிப்பு, அரசு சாரா நிறுவனங்கள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்பு திரட்டப்பட்டு, மக்கள் இயக்கமாக இந்த இயக்கம் செயற்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.