“நீதியும் நேர்மையுமான தேர்தலை நடத்த அதிகாரிகளுக்கு உதவுமாறு அனைத்து மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது.
நாடு பூராகவும் இடம்பெறவுள்ள இந்தத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள இவ்வேளை, சட்டம், ஒழுங்கை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதன் மூலம் நீதியும் நேர்மையுமான தேர்தலை நடத்த அதிகாரிகளுக்கு உதவுமாறு அனைத்து மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும், ஜனநாயக செயற்பாட்டில் தமக்குள்ள அர்ப்பணிப்பை நிரூபிக்கும் வகையில் அனைத்து மக்களும் இந்தத் தேர்தலில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் நேரத்திலும் அதற்குப் பின்னரும் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் நடந்துகொள்ளுமாறும் நான் பொதுமக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்.
ஒன்றிணைந்தவர்களாக எமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் வளமான இலங்கையை உருவாக்குவதில் எமக்குள்ள அர்ப்பணிப்பை வெளிக்காட்ட முன்வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” – என்று அந்த அறிக்கையில் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.