அக்கரைப்பற்று நீதிமன்ற சிறைக்கூடத்தில் இருந்த கைதி ஒருவருக்கு புகையிலை பீடியினை வீசிய ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 3 மாத கடூழிய சிறைத் தண்டனையையும், ஆயிரத்து 500 ரூபாவை தண்டப் பணத்தையும் செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ஹம்சா நேற்று வியாழக்கிழமை (12) தீர்ப்பளித்தர்.
குறித்த நீதிமன்றத்தில் சம்பவதினமான நேற்று வழக்கிற்காக கைதி ஒருவர் சிறைச்சாலையில் இருந்து கொண்டுவரப்பட்டு நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்ட நிலையில் அவருக்கு பகல் உணவை கொண்டுவந்த ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மறைத்து எடுத்துவந்த புகையிலை பீடியினை தனது பாதத்தால் சிறைக்கூடத்தில் இருந்தவருக்கு வீசியுள்ளார்.
இதனை அவதானித்த பொலிஸார் உடனடியாக அவரை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன் போது நீதிமுறைக் கட்டளைச் சட்டப் பிரிவு 55(1) (அ) இனை மீறியமைக்கான குற்றச்சாட்டானது குறித்த சந்தேக நபருக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
சந்தேக நபர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தமது சட்டத்தரணிகளான ஜெனீர், றிஸ்வான், அஸ்மியா ஆகியோர் மூலமாக குற்றவாளியெனத் தெரிவித்ததை அடுத்து 3 மாத கடூழிய சிறைத் தண்டனையையும், ஆயிரத்து 500 ரூபாவை ரூபாவை தண்டப் பணமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ஹம்சா உத்தரவிட்டு தீர்பளித்தார்.