சொராபுதீன், போலி, ‘என்கவுன்டர்’ வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பி.எச்.லோயா மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், மனுதாரர்களிடம் வழங்கும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில், சொராபுதீன் ஷேக் என்பவரை, ஆயுதம் கடத்திய வழக்கில், 2005ல் போலீசார் கைது செய்தனர். அவர், 2005 நவம்பர் மாதம், போலீஸ் காவலில் உயிரிழந்தார்.
இவரை போலீசார், ‘என்கவுன்டர்’ செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது; பின், இந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கை, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, பி.எச்.லோயா விசாரித்து வந்தார். இவர், ௨௦௧௪ல்,மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், ஒரு திருமணத்துக்கு சென்றபோது, மாரடைப்பால் உயிர் இழந்தார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, லோயா மரணம் தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி, பொதுநல வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எம்.எம்.ஷாந்தன கவுடர் அடங்கிய, அமர்வு முன், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மஹாராஷ்டிர அரசு சார்பில், வழக்கறிஞர் ஹரீஷ்சால்வே ஆஜரானார்.
நீதிபதி லோயா மரணம் தொடர்பான, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், ‘சீலிடப்பட்ட’ கவரில் வைத்து, நீதிபதிகளிடம் ஒப்படைத்தார்.
”கவரில் உள்ள ஆவணங்கள் ரகசியமாகபாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், அதை பொது வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது; எனவே, அதை மனுதாரர்களிடம் தர முடியாது,” என, வழக்கறிஞர் சால்வே கூறினார்.
விசாரணை
ஆனால், ‘லோயா மரணம் குறித்து, சுதந்திரமான விசாரணை வேண்டி பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கும் மனுதாரர்களிடம், அனைத்து ஆவணங்களையும், ஒரு வாரத்துக்குள் தர வேண்டும்’ என, மஹாராஷ்டிர அரசுக்குநீதிபதிகள் உத்தரவிட்டனர்.