விடுக்கப்பட்ட கட்டளையை மீளப்பெறுமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம் பிரயோகித்துள்ளார்.
இந்த நாட்டில் நீதித்துறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலையில் எவ்வாறு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் இதனால் தான் சர்வதேச விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிரதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக இருந்த ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களின் இனவாத கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பேரினவாத அரசாங்கம் இன்றும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.
நாட்டின் நீதித்துறை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் நீதித்துறை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2005, 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் நீதியரசர் ஸ்ரீநிதியை இராணுவ வாகனத்தின் ஊடாக கொலை செய்யும் முயற்சி எடுக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க வலுக்கட்டாயமான முறையில் பதவி நீக்கப்பட்டார்.இந்த நாட்டில் நீதி இல்லை என்பதற்கு பல விடயங்கள் சான்று பகர்கின்றன.படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராசசிங்கம் உட்பட பல தலைவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுக்கும், கொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு தொண்டர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.
வழங்கிய கட்டளையை மீளப்பெறுமாறு சட்டமா அதிபர் விடுத்த அழுத்தத்தினால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இந்த நாட்டில் தொடர்ந்து சுயாதீனமாக செயற்பட முடியாது என்பதை நீதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.சிங்கள பேரினவாத கொள்கையில் இருந்து விடுப்பட்டு அரச தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவார்கள் என்பது கானல் நீராகவே காணப்படுகிறது.
முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நீதி கோரி கிளிநொச்சி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு மகஜர் ஒன்றை கையளிக்க வலியுறுத்தியுள்ளார்கள்.
அந்த மகஜரில் ‘ இலங்கைத்தீவில் கடந்த எழுபது (70) ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்ற இன முரண்பாடுகள் தொடர்பிலும், சிங்களத்தின் கட்டமைக்கப்பட்ட இன ரீதியான வஞ்சிப்புகள் தொடர்பிலும், அது இனப்படுகொலையாக வியாபகம் பெற்ற வரலாறு தொடர்பிலும் தங்கள் அறிக்கையாளர்கள் ஊடாக தாங்கள் அறிந்துள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம்.
ஒரு தேசிய இனத்தின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், அதன் கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நீதி, நிருவாகத் துறை ரீதியான பாகுபாடுகள் மற்றும் காலத்துக்குக் காலம் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற வன்பறிப்புகள் என்பவை, உலகத்தில் வாழ்கின்ற எண்ணிக்கையில் குறைந்த ஒரு தேசிய இனக்குழுமத்தை எவ்வாறு நிர்மூலமாக்கும் என்பதை உணர்ந்துகொள்வது அத்தனை சிரமமானதல்ல.
இலங்கைத்தீவில் தமிழ் தேசிய இனம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையும் ஓரவஞ்சகப் போக்கும் இன்று இலங்கைத்தீவில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தினதும் ஜனநாயக நீதித்துறை சார் உரிமைகளைப் பறித்துள்ளது என்பது நிதர்சனமாகும். அரசிற்குப் பலம் கிடைக்கின்ற போதெல்லாம் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு நிருவாகத் துறையின் கைப்பொம்மையாக செயற்படும் விதமாகவே நீதித்துறை உருவாக்கப்பட்டு வருகிறது.
நீதிச்சேவை ஆணைக்குழுவை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கி அதனூடாக நீதிபதிகளின் நியமனங்கள், பதவி உயர்வுகள், நலனோம்பு நயக்கொடைகள், பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு என்பவையெல்லாம் அரசியல் அதிகார விருப்பப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்மூலம் அரசு விரும்பிய தீர்ப்புகளைப் பெறவும், ஆணைகளை வழங்கவும், அரசியல் அதிகாரத்தைக் காபந்து செய்யவும் ஏற்றவகையில் இலங்கையின் நீதித்துறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டத்தின் ஆட்சி பறிக்கப்பட்டு நிருவாகத்துறையின் நோக்கங்களை அடையும் வகையில், விசேடமாக அரசாங்கத்தினது போர்க்குற்றங்கள், இனப்படுகொலை விடயங்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்கள், மனிதப்புதைகுழி விவகாரங்கள், பௌத்தமயமாக்கல், நில மற்றும் பண்பாட்டு ஆக்கிரமிப்பு என்பவற்றை சட்டமுறைமைகளுக்கு முரணாகக் கையாள்வதற்கு நீதித்துறை நிர்ப்பந்திக்கப்பட்டதன் விளைவே நீதிபதி சரவணராஜா அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய நிகழ்வாகும்.
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தனது ஆட்சியின் நோக்காகக் கொண்டு சர்வாதிகார சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஜனநாயக முலாம் பூசிக்கொண்டு திடமான வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகள் எவையுமின்றி, உறுதியான அரசியலமைப்பு ஏற்பாடுகளின்றி வெறும் இனத்துவேச சிந்தனைகளின்மேல் ஏறிநின்று இலங்கையின் நீதித்துறையினையும் இங்கு வாழ்கின்ற தமிழ்த்தேசிய இனத்தையும் கட்டமைக்கப்பட்ட வழிமுறைகளின் ஊடாக அரசு அழித்து ஒழித்து வரும் உச்ச தருணமாகிய இவ்வேளையில் தாங்களும் சர்வதேச சமூகமும் நேரடியாகத் தலையீடுசெய்து அமைதி, சமாதானம், நல்லிணக்கம், நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றைப் பாதுகாக்கவும் சகோதரத்துவம் மிக்க இலங்கையைக் கட்டியெழுப்பவும் தங்கள் எல்லாவகை வல்லமைகளும் அணுகுமுறைகளும் சமரசங்களற்ற வகையில் இலங்கைத்தீவுக்குத் தேவையென தங்களை அழைத்து நிற்கிறோம் என்று வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் வதிவிட பிரதிநிதிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
குருந்தூர் மலையில் உள்ள சிவன் ஆலயத்தை இடித்தழித்து அங்கு பௌத்த விகாரை கட்டும் போது கட்டுமாண பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தடையுத்தரவு பிறப்பித்த போது பௌத்த பேரினவாத கொள்கையுடையவர்கள்,பௌத்த பிக்குகளை ஒன்றுத்திரட்டி படை பட்டாளத்துடன் ஒன்றிணைந்து குருந்தூர் மலையில் பௌத்த விகாரையை கட்டி முடித்துள்ளார்கள்.இது நீதிமன்றத்தை அலட்சியப்படுத்தும் செயற்பாடாகும்.
திருகோணமலையில் அரிசி மலை பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையை புறக்கணித்து பலவந்தமான முறையில் பௌத்த விகாரை கட்டப்படுகிறது. இந்த நாட்டில் நீதி எங்குள்ளது. நாட்டின் நீதித்துறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் மக்களை முடக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது. எவ்வகையான அடக்குமுறையை கொண்டு வரலாம் என்றே அரச தலைவர்கள் சிந்திக்கிறார்கள்.
இந்த நாடு முன்னேற்றமடைவதற்கு எந்த சாத்தியமும் கிடையாது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை விவகாரம், கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதால் நீதிபதி சரவணராஜா பாரிய நெருக்கடிக்குள்ளானார். தமிழ் நீதிபதி நீதி வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பேரினவாத கருத்தை வெளியிட்டார்.
இலங்கையில் நீதித்துறை இறந்துள்ளது. இந்த நாட்டிலா இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்கப் போகிறது. இதனால் தான் நாங்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணைகளை கோருகிறோம். தீர்வு திட்டங்களுக்காக கொண்டு வரப்பட்ட அறிக்கைகள், திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சகல இனங்களையும் ஒன்றிணைத்து இந்த நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேச விசாரணை ஊடாக தீர்வு கோருகிறோம். இந்த நாட்டில் நீதி கிடைக்காது, நீதிக்கட்டமைப்பை அரசியல் தலையீட்டால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றார்.