மலேசியாவில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழாவில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்றார். அப்போது கமல், நடிகர் விவேக்கின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். கமல் அளித்த சுவாரஸ்ய பதில்கள் வருமாறு…
களத்தூர் கண்ணம்மா கமல் – காதல் நாயகன் கமல் – களமிறங்கி கருத்து சொல்லும் கமல் இதைப்பற்றி சொல்லுங்க?
களத்தூர் கண்ணம்மா – சொன்னதை சொல்லும் கிளி. அது ஒரு குழந்தை.
அதன்பின்னர் காதல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதிலும் கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்துவிட்டேன். மற்றபடி களமிறங்கும் கமல், அது என் குரல், உங்கள் குரல். என்னை பேச வைத்து கொண்டிருக்கும் குரல் எல்லாம் மக்களின் குரல் தான்.
வயது கூட கூட எங்காவது ஆன்மிகம் எட்டி பார்க்கிறதா?
நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் தான் பார்த்து கொள்வேன். இப்போது அப்படி தான் வயது கூட கூட ஞானமும், அனுபவமும், அறிவும் கூடும், அதை பகுத்தறியும் திறனும் கூடியே தீரும்.
உங்களின் டுவிட்டர் தமிழ் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
சொல்ல வேண்டியதை அழுத்தி சொல்ல வேண்டும். சில விஷயங்களை பொத்தாம் பொதுவாக பேசும்போது அது கெட்டவார்த்தை போன்று தோன்றும். அதை தவிர்க்கவே சில நல்ல தமிழ் சொற்களை உபயோகிக்கிறேன். அது சில தமிழ் அறிஞர்களுக்கு புரிந்து விடாமல் போய்கிறது. அதுவும் நல்லதே.
நடனம், இசை, நடிப்பு, இயக்கம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் அறிந்தவர். உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா?
தேவை என்பது மனிதனுக்கு எல்லையில்லா ஒரு விஷயம். இது போதும் என்று நினைத்துவிட்டால் அவன் ஞானி ஆகிவிடுவான். எனக்கு எது தேவை என்பதே தெரியாமல் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எனக்கான தகுதி என்ன என்பதை ரசிகர்களின் கரகோஷம் தான் உணர்த்துகிறது. அதை நான் பெற்றுவிட்டேனா என்பது தெரியவில்லை. அதற்கான முயற்சியில் தொடர்ந்து கொண்டே இருப்பேன். அதில் வெற்றி கிடைக்காமலும் போகலாம்.
உங்களின் எந்த படத்தின் வசனத்தை இப்போது பேச சொன்னால் பேசுவீர்கள்?
என் போன்ற கலைஞர்கள் எல்லாம் நடிகர் சிவாஜியின் வனசத்தை பேசி தமிழை புரிந்து கொண்டவர்கள். அப்படிப்பட்ட சிவாஜி, நான் எழுதிய வசனத்தை தேவர்மகன் படத்தில் பேசினார். இதை விட என்ன ஒரு பெருமை இருக்க முடியும்.
மற்றவர்கள் கட்டை விரலை கூட தூக்க பயந்த நேரத்தில் நீங்கள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கினீர்கள் இந்த பயணம் தொடருமா?
இந்த பயணம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல, கனுகால் கூட நனையாமல் இருக்க வேண்டும் என்று தான் இருந்தேன். ஆனால் சென்னையில் எப்படி வௌ்ளம் தாக்கி, தண்ணீரில் மூழ்கடித்ததோ… அதுபோல் இந்த சமூக அவலம் தாக்கி எங்களை கழுத்தளவு தண்ணீரில் தள்ளி உள்ளது. எங்களை சுற்றி அழுக்கான சில அசுத்தங்கள் சூழ்ந்து கொண்டுள்ளன. அதிலிருந்து மேம்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இது தனி மனித ஒருவனால் செய்ய முடியாது, அதற்கு தமிழர்களாகிய நீங்களும் இணைந்து செயலாற்றுவோம்.
உங்களின் முதல் மலேசிய அனுபவம் பற்றி சொல்லுங்க?
ரஜினி சொன்னது போன்று எங்களின் இரண்டாவது வீடு என்று சொல்லும் அளவுக்கு இந்த மலேசியா உள்ளது. மறக்க முடியாத முதல் பயண அனுபவம் நிறைய இருக்கிறது.
சோதனைகள் நிறைய வந்தபோது ஜோசியம், ஜாதகம் பக்கம் போயிருக்கிறீர்களா?
எங்க அம்மா நிறைய ஜோசியம் பார்ப்பார்கள். ஆனால் அதை பொய்யாக்கி இருக்கிறேன். அதை எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.
வாழ்வின் நிறைவில் நீங்கள் எவ்வாறு நினைவு கூறப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இருந்தான், வந்தான், சென்றான் என்றில்லாமல் இருக்கிறான் என்ற நிலையில் நிறைவு கொள்ள விரும்புகிறேன்.
மலேசிய மற்றும் உங்கள் ரசிகர்கள் சொல்ல விரும்புவது?
உலகத்தின் மை(ம)ய்யம் நீங்கள் எல்லாம். அதிலும் நானும் உண்டு. அதை மறந்து விடாதீர்கள். நீங்கள் தேட வேண்டியது, தலைமையை அல்ல திறமையை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.