தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் விதமாக செயற்பட்டமையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அது பெருந்தவறு என்றும் கனேடிய தமிழ் ஊடகவியலாளர் கிருபா பிள்ளை தெரிவித்துள்ளார்.
இமாலய பிரகடனம் தொடர்பில் கனடிய தமிழர் பேரவை நடாத்திய ஊடக சந்திப்பில் ( Feb/02/2024. @Hilton Toronto Markham) கலந்து கொண்டபோதே இவர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
“தேசியத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, கனடாவில் பெரிய அமைப்பு, நீங்கள் வேறு திட்டத்திற்குள் போக ஏலுமா? அதனால்தான் இவ்வளவு எதிர்ப்பு உங்களுக்கு வந்தது.
ராஜபக்சவை சந்தித்தமை, சுமந்திரனுடான தொடர்பு, இமாலயப் பிரகடனம் என்பன தமிழ் மக்களுக்கு பெரும் வேதனையைக் கொடுத்துள்ளது.
இவைகள் எங்களுக்கு கிடைக்கக்கூடிய தீர்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது. எமக்கு சாதகமான ஒரு சூழல் உருவாகிவரும் நிலையில் தமிழ் காங்கிரஸ் என்ற பெரும் அமைப்பு இப்படி செய்தமை என்னைப் பொறுத்தவரையில் தவறு. நீங்கள் சிந்தித்து செயற்படவும் அடியெடுத்து வைக்கவும் வேண்டும்.
தமிழர்களுக்கு தீர்வு வழங்குவோம் என்பதை தமிழ் கட்சிகளிடம் உறுதியாக சொல்லும் தரப்புத்தான் அங்கு இனி ஆட்சி அமைக்க இயலும். அங்குள்ள மக்கள் 2009இற்குப் பிறகு முடிவெடுக்க முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
தலைவரின் இறுதி மாவீரர் தின உரையில் புலம்பெயர் தேச மக்களிடம் தான் பொறுப்பு குடுக்கப்பட்டது. போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றார். அது அவரின் தீர்க்கதரிசனம்.
எனவே புலம்பெயர் தேச மக்கள்தான் நீதியைப் பெற்றுத் தீர்வினை பெற்றுக் கொடுக்க போராட வேண்டும். அத்துடன் இங்கு உங்களை மதித்து வந்துள்ள ஊடகவியலாளர்களுக்கு நன்றியையும் தெரிவியுங்கள்…” என்று மேலும் கூறினார்.