கென்ட் அணிக்கு எதிராக கென்டபறியில் நடைபெற்ற 4 நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வளர்ந்துவரும் அணி வீரர் 22 வயதான நிஷான் மதுஷ்க இரட்டைச் சதம் குவித்து வரலாறு படைத்தார்.
அப் போட்டியில் 269 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் இங்கிலாந்து மண்ணில் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த இலங்கை வீரர் என்ற சாதனைக்கு நிஷான் மதுஷ்க சொந்தக்காரர் ஆனார்.
இங்கிலாந்தில் 27 வருடங்களுக்கு முன்னர் நொட்டிங்ஹம்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் கென்ட் அணிக்காக அரவிந்த டி சில்வா 255 ஓட்டங்கள் குவித்து நிலைநாட்டியிருந்த இலங்கைக்கான சாதனையையே நிஷான் மதுஷ்க கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுப்பித்தார்.
6 சதங்கள் குவிக்கப்பட்ட அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கென்ட் பிராந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 595 ஓட்டங்களைக் குவித்து முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
46 வயதான டெரன் ஸ்டீவன்ஸ் 168 ஓட்டங்களையும் ஜோர்ஜ் லிண்டே 107 ஓட்டங்களையும் பில்லி மீட் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களையும் பெற்றனர்.
டெரன் ஸ்டீவன்ஸ், ஜோர்ஜ் லிண்டே ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 264 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்துவீச்சில் உதித் மதுஷான், யசிறு ரொட்றிகோ, தனஞ்சய லக்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் வளர்ந்துவரும் அணி 9 விக்கெட்களை இழந்து 658 ஓட்டங்களைக் குவித்து முதல் இன்னங்ஸை நிறுத்திக்கொண்டது.
நிஷான் மதுஷன்க 392 பந்துகளை எதிர்கொண்டு 37 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 269 ஓட்டஙகளைக் குவித்தார்.
லசித் குரூஸ்புள்ளே 179 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 136 ஓட்டங்களைக் குவித்தார்.
அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 294 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அத்துடன் நுவனிது பெர்னாண்டோவுடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 171 ஓட்டங்களை நிஷான் மதுஷ்க பகிர்ந்தார்.
நுவனிது பெர்னாண்டோ துரதிர்ஷ்டவசமாக 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இவர்களைவிட சன்துஷ் குணதிலக்க 58 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் டெரன் ஸ்டீவன்ஸ், மெக்ஸ் லக்கெட், ஜோர்ஜ் லிண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
கென்ட் அதன் 2ஆவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது. மார்க்கஸ் ஓ’ரியோடான் (102 ஆ.இ.) சதம் குவித்ததும் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
டவண்டா முயேயே 56 ஓட்டங்களையும் ஜோ டென்லி ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.