நாட்டில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக எதிர்வரும் காலங்களில் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும் எனவும் இயற்கை வாயு மின்நிலையத்தை உடனடியாக அமைக்காவிடில் நாட்டு மக்கள் பாதிப்படையக்கூடும் எனவும் மூலோபாய தொழில் முயற்சி முகாமைத்துவ நிறுவனத் தலைவர் அசோக அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.
தொழில் முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;
மின்சார நெருக்கடி தற்போதே ஆரம்பித்து விட்டது. அவசர நிலையில் கூடுதலான விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை தற்போது அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை 2017 ஆம் ஆண்டு தொடக்கம் செப்டம்பர் மாத காலப்பகுதிக்குள் 76.4GW மின்சாரத்தை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரத்தை கொள்வனவு செய்யும் அலகொன்றின் சாதாரண விலை Kw மணித்தியாலத்திற்கு ரூ. 40.48 ஆக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவசர நிலைமையின் கீழ் மின்சார நிலையங்களில் மின்சாரத்தை கொள்வனவு செய்தாலும் இல்லாவிட்டாலும் மூலதன செலவாக மாதத்திற்கு 210 மில்லியன் ரூபாய்கள் அத்தனியார் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும். அதன் சுமை இறுதியில் மின் பாவனையாளர்களுக்கே சுமத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இன்னும், அனைத்து புதுப்பிக்கத்தக்க திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக விரைவான வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறே புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மின்சார முறைமைக்கு பதிலீடு மேற்கொள்வற்காக 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் அதிகரித்து வரும் கேள்வியை பூர்த்தி செய்வதற்காக குறித்த இச்சந்தர்ப்பத்தில் இயற்கை வாயு மின்நிலையத்தை உருவாக்குவதே தீர்வாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.