கடந்த புதன் கிழமை அன்று காலை, திபெத்தின் யார்லுங் சாங்போவில் ஆழமான பள்ளத்தாக்கு ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பாயும் ஆற்றின் போக்கில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏரி போன்ற அமைப்பை உண்டாக்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் எல்லையோரத்தில் கீழ் நிலையில் உள்ள பகுதிகளில் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
திபெத்தின் மென்லிங் கவுண்டி அருகே உள்ள கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்குள்ள ஏரி தண்ணீர் 40 அடி உயரத்தை எட்டியுள்ளது. இதனால் எந்தவொரு காயங்களும், உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடர் குறித்து இந்தியாவிற்கு தொடர்ச்சியாக சீனா தகவல் அனுப்பி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு இந்தியாவில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறிப்பாக அருணாசலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தின் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாவட்ட நீதிபதி தமியோ டாடக், ஆற்றில் நீரின் அளவு பெருமளவு குறைந்துள்ளது. சீனாவில் ஆற்றின் போக்கில் ஏற்பட்ட தடை நீக்கப்பட்டால், திடீரென அதிகப்படியான தண்ணீர் வரத்து இந்தியாவை நோக்கி வந்து சேரும் என்றார்.
கடந்த ஜூன் 2000ஆம் ஆண்டு, யார்லுங் சாங்போவில் இருந்து வந்த அதிகப்படியான நீரால் அருணாசலப் பிரதேசம் மற்றும் கீழ் நிலையில் உள்ள பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. பனிப்பாறைகள், மிக உயர்ந்த சிகரங்கள் ஆகியவற்றால் ஆசியாவின் எண்ணற்ற ஆறுகளுக்கு ஆதாரமாக திபெத் விளங்குகிறது.