அரசாங்க சேவையிலுள்ள நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள குளறுபடிகளுக்கு தீர்வு வழங்குவதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார வாக்குறுதி அளித்துள்ளார்.
இதனையடுத்து அரச நிறைவேற்று அதிகாரிகளின் அடையாள பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் ரஞ்சித் மெத்துமபண்டார மற்றும் அமைச்சு செயலாளர் ஆகியோருடனான பேச்சுவார்த்தையை அடுத்து இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தங்களின் பிரச்சிகைளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி அரச நிறைவேற்று அதிகாரிகள் நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என்று அந்த ஒன்றியத்தின் தலைவர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி, நேற்றைய தினம் நிறைவேற்று அதிகாரிகள் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் அரச நிர்வாக சேவைகள் அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக சுகாதாரம், ஆயுர்வேதம், திட்டமிடல் முகாமைத்துவம், நில அளவை, கல்வி நிர்வாகம், உள்நாட்டு அரசிறை உள்ளிட்ட 17 துறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.