நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி 20வது திருத்தச் சட்டமூலத்தை கொண்டு வந்தாலும் அதன் பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் செயலாளர் உபுல் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி மட்டுமே. இதனால், அதனை ஒழிப்பதை எமது கட்சி எதிர்க்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்கும் தேவை எமக்கு இல்லை. எனினும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு காப்பாற்றி கொடுக்க வேண்டும்.இதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி இருக்க வேண்டும்.
நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவும் மத்திய வங்கியின் கொள்ளைக்கும் நிறைவேற்று அதிகாரம் தடையாக இருந்தது. மீதமுள்ள ஒன்றரை வருடகாலத்தில் தடையின்றி மேற்குலக நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தும் நோக்கிலேயே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது பற்றி தற்போது பேசுகின்றனர் எனவும் உபுல் விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.