பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (24) நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் மக்களுக்கு இருந்து வரும் அறிவு மிகவும் குறைவாகும் என வெரிடே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் நூற்றுக்கு 66 வீதமானவர்களுக்கு இந்த சட்டம் தொடர்பில் எதுவும் தெரியாது என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த சட்டம் தொடர்பில் அறிந்திருப்பது நூற்றுக்கு 34 வீதமானவர்களாகும். மேலும் நூற்றுக்கு 56 வீதமானவர்கள், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதற்கு இருக்கும் சுதந்திரம் குறைவடையும் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சட்டம் காரணமாக பாரிய மாற்றம் எதுவும் இடம்பெறப்போவதில்லை என 25 வீதமானவர்கள் தெரிவித்துள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் குறித்த சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் சமுக வலைத்தள துஷ்பிரயோகம் குறைவடையும் என நூற்றுக்கு 19 வீதமானவர்களின் நிலைப்பாடாகும் என ரிசேர்ச் நிறுவனத்தின் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் தொடர்பில் முன்னணி சர்வதேச நிறுவனங்கள் பல எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
குறித்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட்டால், நாட்டில் தற்போது தலைதூக்கிவரும் டிஜிடல் பொருளாதாரத்துக்கும் நேரடி வெளிநாட்டு முதலீட்டுகளுக்கும் தாக்கம் செலுத்தும் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.