இந்த நாட்டில் தேர்தல் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கின்ற போது காலம் காலமாக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் அண்மையில் முடிவுற்ற 2018க்கான உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது தொடர்பாக தற்போது நாட்டில் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த வேட்பு மனுக்கள் ஏன் இப்படி நிராகரிக்கப்படுக்கின்றது என்பதனையும் அது கையளிக்கப்படுக்கின்ற ஒழுங்குகள் தொடர்பாகவும் சற்றுப்பார்ப்போம்.
நாட்டில் 2018 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஆராய்கின்ற போது இந்த நாட்டில் 341 உள்ளுராட்சி மன்றங்கள் இருக்கின்றன. அதற்காக 8356 உறுப்பினர்கள் தெரிவாக வேண்டி இருக்கின்றது. என்றாலும் கணித ஒழுங்கு கையாளுக்கின்ற போது இது சற்று அதிகரிக்க இடமிருக்கின்றது. அதன் எண்ணிக்கையை இப்போது எமக்கோ தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கோ இந்த நேரத்தில் உறுதியாகக் குறிப்பிட முடியாது.
இப்படி இருக்கின்ற 341 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் கட்சி செயலாளரே வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அவருக்கு குறிப்பிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இதனைக் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க முடியாது எனவே ஒவ்வொரு கட்சியின் செயலாளரும் அந்த விண்ணப்பங்களில் கையெழுத்திட்டு அதனை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளிப்பதற்கு ஒரு முகவரை நியமனம் செய்வார். அவர் ஊடாகவே இந்த விண்ணப்பங்கள் கையளிக்கப்பட வேண்டும்.சுயேட்சைக் குழுக்களைப் பொறுத்த வரை அதன் தலைவரே இந்தப் பணியைச் செய்ய வேணடும்.பிழையான ஒரு வேட்பு மனுவை நிராகரிக்கின்ற அதிகாரம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கே இருக்கின்றது.
அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இறுதிநாள் குறிப்பிட்ட நேரம் முடிவடைவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் பகிரங்கமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதில் ஏதும் குறைகள் இருப்பின் அது பற்றி ஆட்சேபனைகளைத் தெரிவிக்கின்ற உரிமை கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் இருக்கின்றது. அப்படிக் சுட்டிக்காட்டப்படுகின்ற ஒரு விண்ணப்பத்தில் குறைகளை தெரிவத்தாட்சி அதிகாரி உறுதிப்படுத்திக் கொண்டால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும்.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவது தொடர்பான 2012 இலக்கம் 22 பிரிவு 31 சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அந்த விதியின் படி
1.வேட்பு மனுவைக் கையளிக்க முன்னர் அதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பணம் செலுத்த வேண்டும். சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு 5000.00 ரூபா கட்சி வேட்பாளர் ஒருவருக்கு 1500.00 ரூபா விண்ணப்பத்திலுள்ள மொத்த எண்ணிக்கை படி இந்த தொகை அமையும்.
உதாரணத்துக்கு கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பறை பிரதேச சபைக்கு 33 உறுப்பினர்கள் எனவே அங்கு ஒரு அங்கிகரிக்கப்பட்ட கட்;சி 49500.00 ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும். சுயேட்சைக் குழுவானால் 165000.00ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும். குறித்த தினத்திற்கு கட்டுப்பணம் செலுத்தாவிட்டால் தெரிவத்தாட்சி அலுவலரால் விண்ணப்பம் நிராகரிக்கபப்டும்.
2.உள்ளுராட்சி சட்டமூலத்தில் சொல்லப்படுகின்ற எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை பட்டியலில் அடங்கி இருக்காத இடத்தில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கபடும்.
3.விண்ணப்பத்தில் கட்சி செயலாளர் அல்லது சுயேட்சைக் குழுவாக இருந்தால் அதன் தலைவர் கையெழுத்திட வேண்டும்.
4.இந்த விண்ணப்பத்தை ஒரு சமாதான நீதவான் உறுதிப்படுத்த வேண்டும் அப்படி செய்யாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
5.தயாரிக்கப்பட்ட வேட்பு மனு கட்சி செயலாளரினால் அல்லது சுயேட்சைக் குழுவாக இருந்தால் அதன் தலைவரினால் கையளிக்கப்பட வேண்டும். ஒரு செயலாளருக்கு நாம் முன்பு சொன்னது போல் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இதனைக் கையளிப்பது சாத்தியம் இல்லை. எனவே அவரால் நியமிக்கப்பட்ட முகவரே இதனைக் தெரிவத்தாட்சி அலுவலரிடத்தில் கையளிக்க வேண்டும். அப்படி முறையாகக் கையளிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இந்த இடத்தில் ஒரு சுவையான சம்பவம் நினைவிற்கு வருகின்றது மு.கா.தலைவர் அஷ்ரஃப் இருந்த காலம் அனுராதபுரத்தில் தனது கட்சி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுக்கின்ற போது, அதனைக் கையளிக்கப்போன இடத்தில் மாணவன் ஒருவரே முகவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். தனது ஆசிரியரும் அவருடன் அங்கு சென்றிருந்தால் அவர் அந்த விண்ணப்பத்தை மரியாதைக்காக தனது ஆசான் ஊடாகக் கையளிதிருக்கின்றார். இந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட இருக்கின்றது. இந்த விவகாரம் தலைவர் அஷ்ரஃப் அவர்களுக்குத் தெரியவரவே உடனே சுயேட்சைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்து அதனை அவர் அன்று சரி செய்து கொள்ள முடிந்தது.
6.குறித்த தினத்தில் குறித்த நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒரு வினாடி தாமதமானாலும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது.
7.பால் அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும் அந்த எண்ணிக்கை தவறாக அமைந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
8. பெண் என்ற இடத்தில் தவறாக ஆண் என்று குறிப்பிடப்பட்டிருந் தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். (சில நாமங்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவாக இருப்பதால் கட்டாயம் பால் எது என்று அங்கு பதியப்பட வேண்டும்.) அப்படிப்பதியப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
9. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவாகவோ மேலதிகமாகவோ இருந்தாலும் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
கடைசி நேரத்தில் இந்த விண்ணப்பங்களைக் கையளிக்கப் போகின்ற நேரத்தில்தான் இந்த தவறுகள் நடந்து விடுகின்றன. எனவே இதில் ஈடுபாடு கொள்கின்றவர்கள் திட்டமிட்டு இதனை முன் கூட்டியே செய்தால் தவறுகளைத் தவிர்க்கலாம்.
கடைசி நேரம் வரை பட்டயலில் வெட்டுக் கொத்துக்கள் நடப்பதும் பல விண்ணப்பங்களை கையில் வைத்துக் கொண்டு இதனைத் தயாரிப்பதாலும் தவறுகள் நடக்கின்றன.
தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் தொடர்ப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரைத் தொடர்பு கொண்டு கேட்டால் அவர்கள் இந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளுமாறு நீதி மன்றத்தை நாடினால் அப்படி நீதி மன்றத்திற்கு அதனை சரி செய்யும் படி கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் கிடையாது. அதற்கு எதிராக நாம் ஆஜராகுவோம் என்று அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றார்.
தேர்தல் ஆணையகம் இப்படி நிராகரித்த வேட்பு மனுக்களை எப்போதாவது நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பித்த முன்னுதாரணங்கள் இருக்கின்றதா என்று அவர் திருப்பிக் கேட்கின்றார். என்றாலும் இது பற்றி எவருக்கும் நீதி மன்றில் போய் வழக்காடும் உரிமை இருப்பதை அவர் ஏற்றுக் கொள்கின்றார்.
பப்பரல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ரோஹன ஹெட்டி ஆரச்சியிடம் இது பற்றி விசாரித்ததால் இப்படிப்பட்ட வழக்குகளால் நமது நாட்டில் ஒரு போதும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட வரலாறுகள் கிடையாது என்று அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் நீதி மன்றம் தேர்தல் திணைக்களம் சரியாகத்தான் தனது பணிகளைச் செய்திருக்கின்றது என்று சான்றிதழ் கொடுத்திருக்கின்றது என்றும் ஹெட்டடியாரச்சி குறிப்பிடுகின்றார்.
எனவே வரலாற்றைப் புரட்டிப்பார்த்ததில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கல் அதோ கெதிதான் என்றாலும் வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் சமாளிக்க தவறுவிட்டவர்கள் தரப்பில் எதையாவது செய்துதானே ஆக வேண்டும்.
எனவே இராஜாங்க அமைச்சர் திலான்பெரேரா ஒரு முறை சொன்னது போல் புறக்கோட்டையில் சட்டத்துறை பேராசிரியர்- மொட்டு அணித் தலைவர் ஜீ.எல். பீரிசை கொண்டு போய் இறக்கிவிட்டால், அவர் வீடு திரும்பி வரமாட்டார் அதாவது வழி தேடிக் கொள்ளமாட்டார் என்று கூறியது போல் பேராசிரியரின் நிராகரிக்கப்பட்ட மொட்டுக்கள் மலர்வதற்கு வாய்ப்பே கிடையாது என்றுதான் தெரிகின்றது. என்றாலும் வழக்குத் தீர்ப்பு உத்தியோகபூர்வமாக இதனை அறிவிக்கும் வரை நாம் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு மௌனமாக இருப்போம். காலம் பதில் தரட்டும்.