நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட் சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (9) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சிறப்பான நிலையில் இருக்கிறது.
முதலாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது இலங்கை அதன் முதலாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து, 305 ஓட்டங்களை பெற்றிருந்தது.
மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் மழை காரணமாக இரண்டு தடவைகள் தடைப்பட்ட ஆட்டத்தில் 75 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது.
அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை, 7ஆவது ஓவரில் ஆரம்ப வீரர் ஓஷத பெர்னாண்டோவின் விக்கெட்டை இழந்தது. அவர் 13 ஓட்டங்களைப் பெற்றார். (14 – 1 விக்.)
தொடர்ந்து அணித் தலைவர் திமுத் கருணாரட்னவும் குசல் மெண்டிஸும் திறமையாக துடுப்பெடுத்தாடி, அரைச் சதங்கள் குவித்ததுடன், 2ஆவது விக்கெட்டில் 137 பெறுமதிமிக்க ஓட்டங்களை பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 151 ஓட்டங்களாக இருந்தபோது இருவரும் ஆட்டமிழந்தனர்.
திமுத் கருணாரட்ன மிகவும் பொறுப்புணர்வுடன் நிதானமாக துடுப்பெடுத்தாடிய அதேவேளை, குசல் மென்டிஸ் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடினார்.
83 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 16 பவுண்டறிகளுடன் 87 ஓட்டங்களை பெற்றதுடன், திமுத் கருணாரட்ன 87 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து முன்னாள் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி, 4ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களை பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
இந்நிலையில் தினேஷ் சந்திமால் 6 பவுண்டறிகளுடன் 39 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 27 ஓட்டங்கள் சேர்ந்தபோது திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஏஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (260 – 5 விக்.) அவர் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸை விளாசியிருந்தார்.
துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினால் அடுத்த டெஸ்ட் வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற அழுத்தத்துக்கு மத்தியில் ஆடுகளம் புகுந்த நிரோஷன் திக்வெல்ல 7 ஓட்டங்களுடன் வெளியேறினார். (268 – 6 விக்.)
எனினும், தனஞ்சய டி சில்வாவும் கசுன் ராஜித்தவும் திறமையாக துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களை பகிர்ந்ததுடன் அணி 300 ஓட்டங்களை கடக்க உதவினர்.
தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களுடனும் கசுன் ராஜித்த 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் டிம் சௌதீ 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெட் ஹென்றி 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மைக்கல் ப்றேஸ்வெல் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.