அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து 10,400 கி.மீ தொலைவில் வடகொரியா இருந்தாலும், தாக்குதல் நடத்த இதுவொன்றும் நெடுந்தொலைவு அல்ல என வடகொரியா எச்சரித்துள்ளது.
வட கொரியாவின் அணு ஆயுதங்கள் சோதனை குறித்து அமெரிக்கா, தொடக்க காலம் முதலே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.
ஆனால், ‘தங்கள் தற்காப்புக்கு அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை கேட்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை’ என்று பதிலடி கொடுத்தது வட கொரியா.
வடகொரியாவின் தீர்க்கமான இந்த முடிவால் பற்றிக் கொண்டது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை. அது இன்று வரை ஓய்ந்தபாடில்லை.
அமெரிக்கா, கொரிய தீபகற்பத்துக்கு கடந்த சில நாட்களாக அதிக ராணுவத் துருப்புகளை அனுப்பி வருகிறது. இந்நிலையில், வட கொரிய அரசின் செய்தித்தாளான ரோடங் சின்மன் (Rodong Sinmun), ‘டிரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில், வட கொரியா என்னதான் அணு ஆயுத சோதனை நடத்தினாலும், அணு குண்டை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்தாது என்று அலட்சியமாக தெரிவித்துள்ளார்.
ஆனால், வட கொரியாவிலிருந்து நியூயார்க் நகரத்துக்கு அணு ஆயுத குண்டு மூலம் தாக்குதல் நடத்துவது ஒன்றும் சாத்தியமில்லாத காரியம் இல்லை.’ என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூயார் நகரத்தில் இருந்து வடகொரியா நாடு 10,400 கி.மீ தொலைவில் இருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் இதுவொன்றும் நெடுந்தொலைவு அல்ல எனவும் வடகொரியா எச்சரித்துள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில் சொன்ன கருத்துக்கு இப்போது வட கொரியா பதிலளித்திருப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
ஜனாதிபதி டிரம்ப், சமீபத்தில் தனது ஜப்பான் பயணத்தை அடுத்து, ‘வட கொரியாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருங்கள்’ என்று ஜப்பானிய பிரதமரிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.