இளையோர் கிரிக்கெட் உலகக்கிண்ண தொடரில், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் மண்டியிட வைத்து கம்மீரமாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 202 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று, இளையோர் கிரிக்கெட் உலகக்கிண்ண தொடரில், முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
இதன் படி ஆப்கானிஸ்தான் அணி, எதிர்வரும் 29ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் அவுஸ்ரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 309 ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து 310 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி 28.1 ஓவர்களுக்கு 107 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன் மூலம் நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி 202 ஓட்டங்களால் முதல் தோல்வியை சந்தித்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் 23 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்ரிகள் அடங்களாக 66 ஓட்டங்களை குவித்த அஸ்மத்துல்லா இப்போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.