2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளுஅம்மாள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பு குறித்து, கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
இந்த தீர்ப்பு எனக்கு மட்டுமல்ல எனது குடும்பத்துக்கும், தி.மு.க.வுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. இது தி.மு.க.வுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட போலி வழக்கு. அதை வேண்டுமென்றே இழுத்தடித்தனர். தற்போது அதில் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வுக்கு எதிராக இருக்கும் அத்தனை பேருக்கும் வழக்கின் சூழ்ச்சியில் பங்கு உண்டு. அதை உடைத்து, தலைவர் கருணாநிதி வழியில் நியாயத்தை நிலை நிறுத்தி இருக்கிறோம்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கும், இந்த தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எப்படி இருந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். தீர்ப்பினால் அரசியலில் மாற்றம் வரும் என்பது அல்ல, விரைவில் அரசியல் மாற்றம் வரவேண்டும். அப்போதுதான் மக்கள் காப்பாற்றப்படுவார்கள். இந்த வழக்கால் 6 ஆண்டுகாலம் நல்ல அரசியல் பாடம் எனக்கு கிடைத்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த 6 ஆண்டுகளில் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. 176 ஆயிரம் கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக இவ்வழக்கில் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.
ஒரு நிறுவனத்தின் இயக்குனராக அதிலும் வெறும் 20 நாட்கள் இருந்தேன் என்பதற்காக நான் குற்றவாளியாக்கப்பட்டேன். இத்தனைக்கும் அந்த நிறுவன இயக்குனர் குழு கூட்டத்தில் நான் கலந்து கொண்டது இல்லை. எந்த ஆவணத்திலும் நான் கையெழுத்திடவில்லை. தேர்தலுக்கு 5 மாதமே இருக்கும் நிலையில் தி.மு.க. தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதற்காக வீணாக இந்த வழக்கில் என் பெயர் இழுக்கப்பட்டது.
கருணாநிதியின் ஆட்சி அடுத்த 5 ஆண்டு தொடரக்கூடாது என்பதற்காக என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. என் பெயர் இதில் இழுக்கப்பட்டதற்கு இதுவே முழு காரணமாக இருந்தது.
அரசியல் வாயிலாக ஏராளமான சொத்துகளை நான் குவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் என்னுடைய 20 வயதிலேயே அரசியலில் சேர்ந்திருப்பேன். ஆனால் என்னுடைய 40 வயதில் தான் அரசியலுக்கு வந்தேன். எனக்கு அதிகாரப்பசி இருந்திருந்தால் என்னால் மிக எளிதாக அமைச்சராக வந்திருக்க முடியும். ஆனால் நான் அமைச்சராக வர மறுத்து விட்டேன். இந்த வழக்கில் நான் பொய்யாக இழுத்து விடப்பட்டு இருக்கிறேன். என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொய் புகார் சுமத்தப்பட்டது.
இந்த 6 ஆண்டு காலத்தில் எனக்கு பக்கப்பலமாகவும், தூணாகவும் இருந்து ஆதரவு தெரிவித்த எனது குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.