ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை அமைப்பு நிதியை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால் பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சீனா தனது பழங்கால பட்டு பாதையை மீட்டெடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முக்கிய சாலை அமைப்பு திட்டங்களுக்கு சீனா நிதியுதவி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
இது சீனா – பாகிஸ்தான் பொருளாதார விரைவு சாலை திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சீனாவில் ஜிங்ஜியாங் பகுதியுடன் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியுடன் இணைக்க சாலை வசதி ஏற்படுத்தப்படும்.
இதற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் இந்த சாலை அமைப்பு திட்டத்தை மேற்கொள்வதில் ஊழல் புகுந்து விளையாடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, நிதியுதவி அளிப்பதை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.