புதிய இணைப்பு
நாளை (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை சற்றுமுன் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
திருத்தப்பட்ட மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ (Manjula Fernando) தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பானது இன்று (15) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து உரிய தரவுகளை ஆராய்ந்து பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்திற்கொண்ட பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விசேட கலந்துரையாடல்
இது தொடர்பில் இன்று (15) காலை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன் பிற்பகலில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மின் கட்டணத்தை சுமார் 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும், வீடு மற்றும் மத தலங்களில் மின்கட்டணம் 18 சதவீதத்தாலும், கைத்தொழில்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின்கட்டணம் 24 சதவீதத்தாலும் குறைக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.