மாநிலம் முழுவதும் மகாளய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியாமல் போனதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மகாளய அமாவாசை தினத்தில் புண்ணியதலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி எள், தண்ணீர் ஆகியவற்றை இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்கள் வழிபாட்டில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மகாளய அமாவாசை தினத்தில் தமிழகம் முழுவதும் பிரபலமான கோவில்கள் மட்டுமின்றி சின்ன கோவில்கள் மற்றும் நீர்நிலைகளிலும் தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. வாரத்தில் மற்ற நாட்கள் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாளய அமாவாசை புதன்கிழமை வருவதால் கட்டுப்பாடு இருக்காது. எனவே தர்ப்பணம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று பொது மக்கள் கருதினர்.
இந்த நிலையில் நாளை கோவில்களுக்கு தரிசனத்துக்கு செல்லவும், புண்ணிய தீர்த்தங்களில் தர்ப்பணம் செய்யவும் அரசு தடை விதித்துள்ளது.
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளம் உள்பட அனைத்து கோவில்களின் திருக்குளங்களிலும் பொதுமக்கள் திரண்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் நாளை தர்ப்பணம் கொடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம்.
நாளை (புதன் கிழமை) மகாளய அமாவாசை தினம் வருகிறது. இதையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை (புதன் கிழமை) முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்கூட்டியே பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி தங்குவது வழக்கம். அந்த வகையில் பக்தர்கள் தங்கு வதை தடுக்க திருவள்ளூர் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட இடங்களில் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள சாந்தாரம்மன் கோவிலில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோடியக்கரை கடற்கரையிலும் பக்தர்கள் புனித நீராட தடைவிதித்து கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். தடையை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு பாயும் வாங்கல், நொய்யல், வேலாயுதம்பாளையம், நெரூர் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில் அருகே திறந்தவெளி மைதானத்தில் ஏராளமானவர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நாளை முதல் 2 நாட்கள் அந்த மைதானத்தில் பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள சுருளி ஆற்றங்கரை, கோபால சமுத்திர கரை, பழனி சண்முகா நதி ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை.
கோபாலசமுத்திரம் 108 விநாயகர் கோவிலிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி படித்துறை
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும் தர்ப்பணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மாசாணியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை முருகன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு கோவை மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அருகே உள்ள திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்த 4 கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் விதிமுறைகளை கடை பிடிக்கிறார்களா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் சமீரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி தாமிரபரணி படித்துறைகளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 10-ந்தேதி வரை 6 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும், படித்துறைகளில் திதி, தர்ப்பணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் சொரிமுத்து அய்யனார் கோவிலிலும், பாபநாசம் கோவில்களிலும் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தரங்கம்பாடி, பூம்புகார் கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் பொதுமக்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில், கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு இன்று முதல் 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் கடற்கரையிலும் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்துள்ளனர்.
திருவையாறு அய்யாரப்பர் கோவில், காவிரி படித்துறை, கும்பகோணம் பகவத் படித்துறை ஆகிய இடங்களில் தர்ப்பணம் கொடுக்க தடைவிதித்துள்ளனர்.
மிக முக்கியமான தீர்த்த தலமான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், சேதுக்கரை தீர்த்தம், தேவிப்பட்டினம் தீர்த்தம், சாயல்குடி மாரியூர் கடற்கரை ஆகிய இடங்களில் நீராடவும், தர்ப்பணங்கள் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவில்களிலும் இன்று முதல் 2 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் ஏராளமானவர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள். அங்கு இன்றுமுதல் பொது மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் தர்ப்பணம் செய்ய தடைவிதித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் மகாளய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டுப்பாடுகளுடன் மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யவுமில்லை.
இதனால் பொதுமக்கள் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியாமல் போனதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]