மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நாளை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக வழிபாட்டு தலங்களில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களில் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இந்த நிலையில் கோவில்களில் நாளை (புதன்கிழமை) ஆடி பூரத்தை முன்னிட்டு அதிகம் மக்கள் கூடுவார்கள் என்ற காரணத்தால் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கலெக்டர் அனிஷ் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் ஆடிப்பூரம் திருவிழாவினை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் 11-ந் தேதி (நாளை) பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. அன்றைய தினம் வழக்கமான பூஜைகள் மட்டும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும். பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியே வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்.
இதர நாட்களிலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல் அரசின் விதிகளை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news