ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி நாளை அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் எனத் தீர்மானம் எடுத்தால், அதற்குத் தலைவணங்க தாம் தயாராகவுள்ளோம் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பதுளை தொகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைத்திருந்தால், எம்மை காலால் உதைந்து கட்சியிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் விரட்டியிருக்க வேண்டும். ஏனெனில், அத்தேர்தலில் நாம் அவருக்காக உழைக்கவில்லை. ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.
நாம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இன்று அரசாங்கத்திலிருந்து வெளியேறிவிடுவதாக தீர்மானம் எடுத்தால், இன்று ஐ.தே.கட்சிக்கு 106 ஆசனங்கள் உள்ளன. அக்கட்சிக்கு ஸ்ரீ ல.சு.கட்சியுடன் ஒட்டியிருக்க வேண்டும் என்ற தேவை கிடையாது.
அக்கட்சி நினைத்தால் இன்னும் தேவையான ஏழு ஆசனங்களை பெற்றுக் கொண்டு ஆட்சி அமைத்திருக்கலாம். ஜனாதிபதியே ஸ்ரீ ல.சு.கட்சியை இணைத்துக் கொண்டு ஐ.தே.க. யுடன் சேர்ந்து செயற்பட்டு வருகின்றார் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.