விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரிதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான நாலக சில்வா தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட சிறைக் கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக சிறைச்சாலை அதிகாரிகள் பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் Y – O பிரிவில் விஷேட கூடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அதிதிகளைப் பார்வையிடுவதற்கு, அங்கிருந்து பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக குறித்த சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.
பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா ஐந்தாவது தடவையாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியிருந்தபோது கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அன்று இரவே கோட்டை நீதவான் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.