இயற்கையின் முன்னிலையில் அனைத்து மனிதர்களும் சமம். இனம், மொழி, நாடு, பொருளாதாரம் போன்ற எந்த வேறுபாடும் இயற்கைக்குக் கிடையாது. புவி வெப்பமயமாதல் பிரச்னையால் இயற்கைக்குப் பெரும் கேடு ஏற்பட்டுள்ளது. கார்பன் டை ஆக்ஸைடு போன்ற பசுமை விளைவு வாயுக்கள் அதிகம் வெளியேற்றப்படுவதால் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்காவிட்டால் பூமியானது மனிதன் வாழமுடியாத இடமாக மாறிவிடும் என எச்சரிக்கை விடுக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
பூமியின் வெப்பநிலையை 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைத்தாக வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2015-ம் ஆண்டு ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உலக நாடுகள் இணைந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 195 நாடுகள் கையெழுத்திட்ட இந்த காலநிலை ஒப்பந்தத்தின்படி, தங்களுடைய கார்பன் வெளியேற்றத்தை அனைத்து நாடுகளும் குறைக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதோடு, மரபுசாரா ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். மேலும், அந்நாடுகள் வளரும் நாடுகள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக தொழில்நுட்ப உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும். பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படை சாராம்சங்கள் இவைதாம்.
உலகத்தின் நலனைக் கருத்தில்கொண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா இதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதன்பின் அதிபர் பதவிக்குவந்த டொனால்ட் ட்ரம்ப், “இந்த ஒப்பந்தம், அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும். அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது”, “இந்த முடிவானது அமெரிக்காவின் வளர்ச்சியைப் பாதிக்க சீனாவின் சதி” என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டி, இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். உலக நாடுகளிடையே இம்முடிவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘ட்ரம்ப்பின் முடிவால் பூமிப் பந்து கொதிக்கும்!’ என புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்திருக்கிறார்.
இந்நிலையில் பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த குட்டி நாடான நார்வே. சுமார் 52 லட்சம் மக்கள்தொகை கொண்ட நார்வேயில், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்குத் தடைவிதிப்பதா என இம்முடிவுக்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியபோதும், அதன்பின் இந்த முடிவுக்கு மக்களிடையே ஆதரவு பெருகியது. பெட்ரோலியப் பொருள்களில் இயங்கும் கார்களுக்குப் பதிலாக, மின்சாரம் மற்றும் பேட்டரியில் இயங்கும் கார்களுக்கு அங்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டன. ஏனெனில், இவ்வகைக் கார்களில் கார்பன் வெளியேற்றம் இருக்காது என்பதால் இவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாது. எலக்ட்ரிக் கார்களுக்கு மானியம் அளித்ததோடு, அவற்றிற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த வரிகளை அந்நாடு நீக்கியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இலவசமாக சார்ஜிங் பாய்ன்ட்கள் வைத்ததோடு, டோல் கேட் கட்டணத்தையும் நார்வே நீக்கியது. இம்முயற்சிகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, தற்போது லட்சக்கணக்கான எலக்ட்ரிக் கார்கள் நார்வே நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.
இயற்கையைப் பாதுகாக்கும் அடுத்தகட்ட முயற்சியில் தற்போது நார்வே இறங்கியுள்ளது. காடுகள் என்பது இயற்கையின் கொடை. தொழில் வளர்ச்சிக்காக காடுகளை அழிப்பதால் பெரும் சூழலியல் மாற்றங்கள் நடக்கின்றன. இதை மனதில்கொண்டு, தொழில்வளர்ச்சிக்காக காடுகளை அழிக்கும் நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்பில் ஈடுபடமாட்டோம் என நார்வே அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா தன்னுடைய கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்க வேண்டும். 2020-ம் ஆண்டுக்கும் 70 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அரசு அதற்காக இதுவரை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனத்தெரியவில்லை. வருடம் முழுவதும் சூரிய ஒளி படும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில், 12.50 ஜிகா வாட்கள் அளவுக்கே மின் உற்பத்தித்திறன் இருக்கிறது. சோலார் மின்சக்தியில் இந்தியா ஏழாவது இடத்தில் இருந்தாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த மின்தேவையில் இது சொற்ப அளவே ஆகும். காற்றாலை மின் உற்பத்தியிலும் இந்தியாவின் நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. அண்டை நாடான சீனாவில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் தற்போது அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், காற்றாலை மின் உற்பத்தியிலும் சீனாதான் முதலிடத்தில் உள்ளது. உலகின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தியில் சுமார் 50 சதவிகிதம் அளவு சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 70 சதவிகிதம் அளவுக்கு நிலக்கரியின் மூலமே பெறப்படுகிறது. நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கார்பனின் அளவு அதிகம் என்பதால் இவற்றை இந்தியா படிப்படியாகக் குறைத்து, மரபுசாரா ஆற்றலை அதிகரிக்க வேண்டும். இந்நிலையில், 370 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை இந்தியா தொடங்கினால், பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது என அமெரிக்க ஆய்வாளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் கனவுகளை மக்களிடையே விதைப்பதோடு ஒரு நாட்டின் கடமை முடிந்துவிடாது. அதற்கான பணிகளை மேற்கொண்டு பலன்களை அறுவடை செய்ய வேண்டியது அவசியம் என்பதை இந்தியா இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும்.
குட்டி நாடான நார்வேயிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.