குருநாகல் நாரமல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறியை மடக்கி பிடித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமையால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு அனுப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாரமல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பெலஸ்ஸ வலங்கட பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (18) இரவு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாரமல்ல பிரதேசத்தில் இருந்து கிரியுல்ல நோக்கி பயணித்து கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்துவதற்கு பொலிஸார் உத்தரவு பிறப்பித்த போதிலும் குறித்த லொறி நிறுத்தாமல் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்துள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் நாரமல்ல பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கடமையில் ஈடுப்பட்டிருந்தாகவும் அவர்கள் இருவரும் அவர்களின் தனிப்பட்ட வாகனத்தில் சிவில் உடையில் கடமையில் இருந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் உத்தரவை மீறி பயணித்த குறித்த லொறியை பின்தொடர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதனை மடக்கி பிடித்துள்ளனர். இதன்போது லொறியை அதிகாரிகள் சோதனைக்குட்படுத்துவதற்கு முயற்சித்ததாகவும் இதன்போது உப பொலிஸ் பரிசோதகர் லொறியின் சாரதியின் தலைப்பகுதியில் துப்பாக்கியை வைத்துள்ளதாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி தவறுதலாக இயங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது படுகாயமடைந்த சாரதி நாரமல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 41 வயதுடைய மஹரவிச்சிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையாவார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த பிரதேசவாசிகள் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் அங்கு பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் உறவினர் மற்றும் பிரதேசவாசிகள் நாரமல்ல பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸ் நிலையத்தின் நுழைவாயிலையும் சேதப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸ் விசேட அதிரப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கவனயீனம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் குறித்த துப்பர்ககிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட புலனாய்வு பிரிவின் பொலிஸ் குழுவொன்றினால் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இப்பீடு வழங்குவதும் தொடர்பில் ஆராய்ப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.