ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் அது மொட்டுக் கட்சிக்கே பாதிப்பாக அமைந்து விடும் என நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சவாதிகள் தெரிவித்து வருகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம்(12.10.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுன பிளவடைந்துள்ளது. அங்கே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு கூறுகின்றது.
வீரராக காட்டிக்கொள்ளும் ரணில்
அதேநேரம் பசில், நாமல், உள்ளிட்ட ராஜபக்சவாதிகள் ரணில் விக்ரமசிங்கவை நியமித்தால் மொட்டுக்கட்சிக்கே பாதிப்பாக அமையும் என்றும் இதனால் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

அத்துடன் அமைச்சுப் பதவி கிடைக்காத இன்னுமொரு தரப்பும் இருக்கின்றது. ஏற்கனவே மொட்டுக் கட்சி வீணாகியுள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்கவோ மொட்டுக் கட்சியினரை மொத்தமாக தனது பக்கம் இழுக்க முயற்சிக்கின்றார். அதனால் தான் சிலரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார்.
அவர் ஜேர்மனி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கி தன்னை வீரர் போன்று காட்டிக்கொண்டாடர். அன்று ராஜபக்சர்களை, மெதமுலன வீரர்களாக பார்க்கின்றனர் என்றவர், இப்போது அவரே மெதமுலன வீரராக பார்க்கின்றார்.
எவ்வாறாயினும் மொட்டுக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டாலும் நாட்டின் தலைவராக சஜித் பிரேமதாசவே வருவார்.
ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தில் இருப்பதற்கு எந்த வழியில் முடியுமோ அந்த வழியில் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.