இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழான வழக்கு சாட்சி விசாரணைகளுக்காக திகதி குறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு வியாழக்கிழமை ( 28 ) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பிப்பதாக திகதி குறித்த நீதிபதி, அன்றைய தினம் மன்றில் ஆஜராக சாட்சியாளர்களுக்கும் அறிவித்தல் பிறப்பித்தார்.
வெளிப்படுத்த முடியாத வகையில் 30 மில்லியன் ரூபா சம்பாதித்தார் என கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் சேர்த்து 6 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கே இவ்வாறு திகதி குறிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கவர்ஸ் கோப்ரேட் நிறுவனம், அந் நிறுவனத்தின் பணிப்பாளர்களான இந்திக பிரபாத் கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, நித்தியா செனானி சமரநாயக்க ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாவர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கும் 2014 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்ரேட் செர்விஷஸ் நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்துடன் செய்த கொடுக்கல் வாங்கலின் போது, மோசடியான முறையில் பாரிய அளவில் பணத்தை பயன்படுத்த சதித்திட்டம் தீட்டியதாகவும், அதன் ஊடாக 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்ததாகவும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் 11 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிப்படுத்த முடியாத வகையில் சம்பாதித்த 30 மில்லியன் ரூபா ஊடாக ஹலோ கோப் எனும் நிறுவனத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும் சட்ட மா அதிபரால் நாமல் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.