நான் தமிழ் சினிமா பார்த்து வளர்ந்தவன்: சுதீப் நெகிழ்ச்சி
கிச்சா சுதீப், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், டெல்லி கணேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘முடிஞ்சா இவன பிடி’. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் வழங்க, ராம்பாபு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
சுதீப் நடிப்பில் வெளியாக இருக்கும் முதல் நேரடி தமிழ் படம் ‘முடிஞ்சா இவன பிடி’ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குநர் பி.வாசு, இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி உள்ளிட்ட பலர் சிறந்த விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் பேசிய நடிகர் சுதீப், “ஒவ்வொரு முறையும் எந்த ஒரு புதுப்படத்தையும் ஒப்புக் கொள்ளும் போது, அது ஒரு புது அத்தியாயம் போல இருக்கும். எனது திரையுலகில் ஒரு சிறு பெயரை எடுத்திருக்கிறேன். என்னுடைய இந்த வயதில் நிறைய அன்பு, பாராட்டு உள்ளிட்டவை பக்கத்து மாநிலங்களில் கிடைக்கிறது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஒன்றும் சென்னைக்கு புதிது அல்ல. எனது திரையுலக படங்களின் படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வரும் போது, தமிழ் திரையுலகினர் காட்டும் அன்புக்கு நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தை தான். தமிழ் நடிகர்களோடு அடிக்கடி உட்கார்ந்து நட்பு பாராட்டுவோம். அவ்வாறு பேசியதால் தான் இணைந்து பணியாற்ற முடியும்.
இங்கு பேசியவர்கள் அனைவருமே நட்சத்திர அந்தஸ்தை பற்றி பேசினார்கள். அதற்காக நான் எப்போதுமே பணியாற்றவில்லை. நான் திரையுலகுக்கு ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என வரவில்லை.
எனக்கு சினிமா பிடிக்கும், ஆகையால் ஏதாவது ஒரு வகையில் இறுதி மூச்சு வரை சினிமாவோடு தொடர்புபடுத்தி இருக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தேன். அடுத்து என்ன என்று யோசிக்கும் போது எல்லாம், பக்கத்து மாநிலத்தில் இருந்து நண்பர்கள் என்னை அழைத்து உங்களுக்கு இங்கு வேலை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
உங்களுடைய ஜாம்பவான்களை எல்லாம் இயக்கியவர் என்னை இப்படத்தில் இயக்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் போதும் அவர் எனக்காக எழுதியிருப்பதை சரியாக பண்ணிவிட வேண்டும் என நினைப்பேன். கே.எஸ்.ரவிகுமார் ஒரு எதார்த்தமான இயக்குநர். அதனால் தான் பலரும் அவருடன் இணைந்து பணிபுரிய விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். அவருடைய இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்துக்கு நானே டப்பிங் பேசியிருக்கிறேன்.
நான் பார்த்து ரசித்து, வளர்ந்த தமிழ் படங்களில் நானே நாயகனாக நடிக்கிறேன் என நினைக்கும் போது சந்தோஷம்” என்று தெரிவித்தார்.