ஞாயிற்றுக்கிழமை காலை 181 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 179 பேராவது பலியாகியுள்ளதால் சோகம் கலந்த ஒரு அமைதியான சூழல் தென்கொரியாவில் பரவியது.
பயணிகளின் கலக்கமடைந்த உறவினர்கள் நண்பர்கள் முவான் சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக கூடி தங்கள் அன்புக்குரியவர்களை தேடினர்.
விபத்திற்கு சில நிமிடங்களிற்கு முன்னர் விமானத்திலிருந்த தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதியில் பறவையொன்று சிக்குண்டுள்ளது என குறுஞ்செய்தி அனுப்பினார் என விமானநிலையத்தில் காணப்பட்ட குடும்பமொன்றை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
நான் எனது இறுதி வார்த்தைகளை தெரிவிக்க வேண்டுமா என்ற செய்தியும் அந்த பயணியிடமிருந்து வந்துள்ளது.
விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிளம்பை கண்டதாகவும் வெடிப்புசத்தங்களை கேட்டதாகவும் உள்ளுர் மக்கள் தெரிவித்தனர் என தென்கொரியாவின் யொன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் தரையிறங்குவதை நான் பார்த்தேன் அது தரையிறங்கும் என நினைத்தேன் ஒளிபோன்றை ஒன்றை கண்டேன்,அதன் பின்னர் பாரிய சத்தமொன்று கேட்டது பின்னர் வானில் புகைமண்டலம் தோன்றியது அதன் பின்னர் தொடர்ச்சியான வெடிப்புச்சத்தங்களை கேட்டேன் என விமானநிலையத்திலிருந்து 4.5 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.