21ம் திகதி ஜுலை மாதம் 2014 அன்று, குரோசியாவில் (Croatie) காணமற்போன 23 வயதுடைய Anne-Cécile Pinel இன் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குரோசியாவில் Slunj இல் நடந்த ஒரு பெரும் டெக்னோ இசைத் திருவிழாவின் போது இந்தப் பெண் காணாமற் போயிருந்தார்.
குரோசியாவில் Tounja பகுதிகளிற்கு வேட்டைக்குச் சென்றவர்கள் அங்கு ஒரு உடலம் கிடந்ததைக் கண்டு காவற்துறையினர்க்கு அறிவித்துள்ளனர். பல அடையாளங்கள் இது காணாமற்போன பிரெஞ்சுப் பெண்ணின் உடலம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவரின் கையில் இன்னமும் இசைக்கச்சேரியில் அணிந்த அடையாளக் காப்பு இருந்துள்ளது. அதே நேரம் இவர் செவிப்புலன் குறைபாட்டினால் அணிந்திருந்த கேட்புக் கருவியை இவரது சகோதரி அடையாளம் காட்டி உள்ளார். தற்போது உறுதிப்படுத்தலிற்காக இந்த உடலத்தின் மரபணு சோதனைக்குட்பட்டுள்ளது.
இந்தப் பெண் காணாமற்போன சில நாட்களிலேயே, இவர் காணமற்போயிருந்த இடத்திற்கருகில் உள்ள ஒரு முன்னாள் கண்ணிவெடி வயற் பகுதியில், இவரது பைகளும் உடமைகளும் கண்டடுக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து குரோசியா காவற்துறையினர் ஆளில்லா விமானங்கள் (Drone) மூலம் தேடுதல் வேட்டை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.