மெல்பர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நான்காவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றியீட்டியது.
தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள அவுஸ்திரேலியா, இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது.
16 பந்துகள் இடைவெளியில் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்தமையே இலங்கை தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை, கவனயீனமான துடுப்பாட்டம், தவறான அடி தெரிவுகள் காரணமாக 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் மீண்டும் திறமையை வெளிப்படுத்திய பெத்தும் நிஸ்ஸன்க 46 ஓட்டங்களைப் பெற்றார். இவர் இந்தத் தொடரில் 4 போட்டிகளில் மொத்தமாக 171 ஓட்டங்களைப் பெற்று இரண்டு அணிகளிலும் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலாம் இடத்தில் இருக்கின்றார்.
அவுஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர் ஒருவர் அதிக ஓட்டங்களைப் பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இதற்கு முன்னர் 2016-17 கிரிக்கெட் பருவ காலத்தில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை சார்பாக அசேல குணரட்ன 141 மொத்த ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார்.
பெத்தும் நிஸ்ஸன்கவைவிட துடுப்பாட்டத்தில், நான்காவது போட்டியில் குசல் மெண்டிஸ் (27), சரித் அசலன்க (22), தனுஷ்க குணதிலக்க (17), சாமிக்க கருணாரட்ன (14 ஆ.இ.) ஆகியோரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
போட்டியின் 17ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை 16 பந்துகளில் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்தமை அதன் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஜய் றிச்சர்ட்சன் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேன் றிச்சர்ட்சன் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 18.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மொத்த எண்ணிக்கை 39 ஓட்டங்களாக இருந்தபோது 3ஆவது விக்கெட்டை இழந்த அவுஸ்திரேலியா சிறு தடுமாற்றத்துக்குள்ளானது.
ஆனால், க்ளென் மெக்ஸ்வெல் (48 ஆ.இ.), ஜொஷ் இங்லிஸ் (40) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியின் முக்கிய பங்காற்றினர்.
இலங்கை பந்துவீச்சில் லஹிரு குமார 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]