ஆரோக்கியமான உளநலத்திற்கு மாசற்ற சுற்றுச் சூழல் எனும் தொனிப்பொருளிலில் கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் பாடசாலை மாணவா்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக் போத்தல்களினால் 35 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் பாடசாலை மாணவா்களிடையே போட்டி ஒன்றின் மூலம் பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றில் ஒரு பகுதியை கொண்டு மேற்படி கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றில் 4000 போத்தல்களில் மாவட்ட வைத்தியசாலையின் உளநல பிரிவுக்கு முன் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
போட்டியின் அடிப்படையில் கிளிநொச்சி பூநகரி சாமிபுலம் அ.த.க.பாடசாலை முதலாம் இடத்தையும், பூநகரி மட்டுவில்நாடு அ.த.க.பாடசாலை இரண்டாம் இடத்தையும், பளை அல்லிப்பளை பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்று முறையே 7000 ரூபா 5000 ரூபா 3000 ரூபா பெறுமதியான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர். இதேவேளை பாடசாலைகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஜந்து ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவின் இந்த செயற்பாடு பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை சூழலிலிருந்து அகற்றும் செயற்பாடுகளுக்கு முன்மாதிரியான செயற்பாடு என்றும், சாதாரனமாக சிறிய அளவு பரிசுத் தொகையுடன் அறிவிக்கப்பட்ட போட்டிக்கு 40 ஆயிரம் கழிவுப் போத்தல்களை சேகரிக்க முடியும் என்றால் பெரியளவில் ஒரு நிகழ்வாக இதனை திணைக்களங்கள் மேற்கொள்ளும் போது சுற்றுப்புறச் சூழலிலிருந்து அதிகளவு பிளாஸ்ரிக் கழவுப் பொருட்களை அகற்ற முடியும் என சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.