யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை நிதியமைச்சர் இரகசியமான முறையில் அமைச்சரவைக்கு சமர்பித்து திருட்டுத்தனமாக அனுமதி பெற்றுக் கொண்டார்.
ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அவர் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தவில்லை. ஆகவே பொய்யுரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையில் நியூபோர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மிகுதியாக இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசாங்கத்தில் இருந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம், வெளியேற்றப்பட்டாலும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். ஏனெனில் எமக்கும், சாதாரண மக்களுக்கும் பிற நாடுகளில் வாழும் உரிமை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ‘மக்கள் பேரவை’ மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் தாக்கத்தின் காரணமாக அமைச்சரவை கூட்டம் நிகழ்நிலை முறைமை ஊடாக இடம்பெறுகிறது. இதனை ஒரு தரப்பினர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
அமெரிக்காவின் நியூபோரட் நிறுவனத்திற்கு யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை நிரந்தரமாக வழங்கும் அமைச்சரவை பத்திரம் திருட்டுத்தனமான முறையில் சமர்ப்pக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம் இடம் பெற்று அடுத்த தினம் தான் நாங்கள் அறிந்தோம். அமைச்சரவையில் பேசப்படாத ஒரு விடயத்திற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன்.
இந்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் நிதியமைச்சர் அமைச்சரவை கூட்டத்தில் எதனையும் தெளிவுப்படுத்தவில்லை.பொய்யுரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அமைச்சு பதவிக்காக பொய்யை உண்மை என எம்மால் குறிப்பிட முடியாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணையை பிறிதொரு தரப்பினர் கொள்ளையடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அமெரிக்க நிறுவனத்திற்கு வலு சக்தி துறையின் அதிகாரம் சென்றால் இலங்கையின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் அதிகாரம் அமெரிக்கா கைவசம் செல்லும். திருட்டுத்தனமான அமைச்சரவை பத்திரம் தேசியத்தை காட்டிக் கொடுக்கும் செயற்பாடாக கருதுகிறோம்.
கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பிலான ஏனைய இரு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அரசாங்கத்தை பிளவுப்படுத்தவும், அரசியல் அநாதைகளாக செயற்படும் எதிர்க்கட்சினரை உயிர்ப்பிக்கவும் எமக்கு அவசியமில்லை. மக்களாணைக்கு அமைய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லவே முயற்சிக்கிறோம்.
தவறுகளை திருத்தவே அரசாங்கத்திற்குள் இருந்துக் கொண்டு போராடுகிறோம்.எவ்வித அச்சுறத்தல் வந்தாலும் அதனை பொருட்படுத்தமாட்டோம். அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் நாட்டுக்காக போராடுவோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் வழங்கிய ஆணையை சிறந்த முறையில் செயற்படுத்த முயற்சிக்கிறோம்.
மிகுதியாகவுள்ள ஒப்பந்தத்தை கைச்சாத்திட ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டு ம்க்கள் அனைவரும் ஒன்றினைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். மக்கள் வழங்கிய ஆணைக்கு மதித்து தவறான ஒப்பந்தத்திற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.
அமைச்சு பதவிகளை காட்டிலும் நாடு முக்கியம் என்பதற்காகவே போராடுகிறோம்.எதிர்க்கட்சியாக இருக்கும் போது தேச பற்றாளர்களாகவும்,ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டுக்கு எதிரிகளாகவும் செயற்பட முடியாது.
நல்லாட்சி அரசாங்கத்தின் தவறை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து,அதற்கு நாங்கள் துணை சென்றால் மக்கள் எம்மை முழுமையாக புறக்கணிப்பார்கள். எமக்கும், சாதாரண மக்களுக்கும் பிற நாடுகளளுக்கு சென்று வாழும் உரிமை ஏதும் கிடையாது இருப்பதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மிகுதியாக உள்ள இரண்டு ஒப்பந்தங்களையும் கைச்சாத்திட ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டு மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
மக்களாணையை கொள்ளையடிக்க முயற்சிக்கும் தரப்பினரது நோக்கத்தை தோல்வியடைய செய்ய ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]