இந்த வருடத்தில் பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவரும்போது அதனை குழப்புவதற்கே ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறது. பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றால் ஒருபோது இந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2024ஆம் ஆண்டு நாடு பொருளாதார ரீதியில் முன்னேறிச் செல்லும் வருடம். அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை சகித்துக்கொள்ளாத எதிர்க்கட்சி தங்களின் வங்குராேத்து நிலையை மறைப்பதற்காக குறுகிய அரசியல் நோக்கில் மக்களை தூண்டி பொருளாதாரத்துக்கு பாதிப்ப ஏற்படுத்த முடியுமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதன் ஓர் அங்கமாகவே கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அத்துடன் உலகில் பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டடிருந்தபோது, அந்த நாடுகளின் எதிர்க்கட்சிகள் தங்களின் நாட்டை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிதன் மூலம் அந்த நாடுகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று கிரீஸ், ஆஜன்டீனா போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அதனை பயன்படுத்திக்கொண்டு அரசியல் லாபம் தேட முயற்பட்டதால் இன்னும் அந்த நாடுகள் வீழ்ச்சியடைந்தே இருக்கின்றன. அதனால் அந்த நாடுகளின் நிலைக்கு இலங்கை செல்லாமல் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததால் குறுகிய காலத்திலேயே எமக்கு பொருளாதார நெருக்கடியில் இருந்து ஓரளவு மீள முடியுமாகி இருக்கிறது.
அதனால் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்றால், தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும். ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவும் உரிமைகளுக்காக பாேராட்டம் மேற்கெள்ளவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
அதேநேரம் வேலை நாளான நேற்றைய தினம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் மக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கி கொழும்பில் இவ்வாறு ஆர்ப்பட்டம் மேற்கொள்ள எடுத்த நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்றால் இந்த வேலையை செய்திருக்க மாட்டார்கள் என்றார்.