அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் அனைத்துச் சந்திப்புக்களையும் நிறைவுசெய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அடுத்தவார முற்பகுதியில் நாடு திரும்பவுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பும் குழுவினர் முதலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து தாம் சந்தித்த தரப்பினருடனான கருத்துப்பரிமாற்றங்கள் சம்பந்தமாக பூரணமான விளக்கங்களை வழங்கவுள்ளனர்.
இந்த விளக்கங்களை வழங்கும் சந்திப்பில் சுமந்திரனுடன் பயணங்களில் பங்கேற்ற ஜனாதிபதி சட்;டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் நிர்மலா சந்திரகாசன் ஆகியோரும் பங்கெடுக்கவுள்ளதோடு, கனடா, பிரித்தனியா நாடுகளுக்கான பயணத்தில் இணைந்து கொண்ட சாணக்கியனும் பங்கேற்கவுள்ளார்.
இதனையடுத்து இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது மேற்படி பயணங்கள் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளதோடு பூகோள அரசியல் செல்நெறி பற்றியும் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]