ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதா இல்லையா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்தபோதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர், எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாயின், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம் இந்த வருடத்திற்குள் சமர்ப்பிக்கப்பட மாட்டாது எனவும், இந்த வருடத்திற்குள் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் செலவீனங்களை முன்னெடுப்பதற்கு நேரி்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டிற்காக சாதாரண வழிமுறையின் பிரகாரம் 2019 ஆம் ஆண்டிலேயே வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில், வரவு – செலவுத்திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படாத ஒரு நிலையில், நிதி விரயம் ஏற்படாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரமே இந்த வருடத்திற்கான செலவீனங்கள் யாவும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,
இதேவேளை, இடைக்கால கணக்கறிக்கையின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, நாட்டின் சட்டதிட்டங்கள், சுற்றறிக்கைகளின் பிரகாரமே செலவிடப்படும் என்பதால், புதிதாக எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் உள்ளீர்க்கப்பட மாட்டாது என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த 1988 ஆம் ஆண்டிலும், 1999 ஆம் ஆண்டிலும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.
எனினும் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்த அதிகாரம் தற்போது நாடாளுமன்றத்திடமே இருப்பதாக தெரிவித்தார்.
ஆகவே நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைக்க வேண்டுமாயின், அதற்கு நாடாளுமன்றத்தின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதுகுறித்து கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.