நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (17) சிறப்பாக நடைபெற்றன.
காத்தான்குடி
காத்தான்குடி மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை நகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில், சுமார் 5,000 திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
அஷ்ஷெய்க் எம்.ஏ.எம் .சிறார் பலாஹி பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் நடாத்தினார். பெருநாள் குத்பாவையொட்டி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்திலும் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.
புத்தளம்
புத்தளம் மாவட்டத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை புத்தளம் கருப்புத்தரவை மைதானத்தில் நடைபெற்றது. குறித்த பெருநாள் தொழுகை இமாம் மின்ஹாஜ் அவர்களினால் நிகழ்த்தப்பட்து.
மூதூர்
மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. தொழுகையினை ஆர்.இமாம் மௌலவி நிகழ்த்தினார்.
ஹஜ் பெருநாள் தொழுகையினை மூதூர் -அல்ஹசனாஹ் சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாடு செய்திருந்தது.
கிண்ணியா
கிண்ணியா குறிஞ்சாக்கேனி வீசி மைதானத்தில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
இதில் பெரும்பாலானவர்கள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் குத்பா பிரசங்கமும் நடைபெற்றது. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய மைதானத்தில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
பெருநாள் தொழுகையையும், பெருநாள் உரையையும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும், மார்க்க அறிஞருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மத் காஸிமி நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை பட்டாணிச்சூர் 5ஆம் ஒழுங்கை குடா வயல் திடலில் நடைபெற்றது.
முஸ்லிம்களின் தியாகத் திருநாளான புனித ஹஜ் பெருநாள் நாடு பூராகவும் வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மௌளவி அஷ்ஷெய்க் A.அறபாத் (பக்ரி) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.