ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர் சங்கம் சுகாதார சேவை சங்கம் துறைமுக சங்கம் அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவை சங்கம் வைத்திய ஆய்வு கூட நிபுணர் சங்கம் மின்சாரம் புகையிரதம் பெற்றோலியம் தபால் மற்றும் தோட்டத் தொழிற்துறை சங்கம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை (28 )பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.
சுகாதார சேவைக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக சுகாதார சேவை தரப்பினர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாமல் சேவை நிலையங்களில் கறுப்பு கொடியேற்றி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான உடையணிந்து சேவைக்கு சமுகமளிக்கவுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு பாராளுமன்றில் கடந்த இரு வாரகாலமாக பயனற்ற வாதப்பிரதிவாதங்கள் மாத்திரமே இடம்பெற்றது.
இதேவேளை ஊழல் ஒழிப்பு அமைப்பின் தலைவர் வசந்த சேனாநாயக்க கூறுகையில்,
ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி பாரிய ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
எதிர்வரும் வாரம் 4 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும், அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையிலும் ஒரு தீர்மானத்தை முன்னெடுக்காவிடின் பாராளுமன்றத்தை அடுத்து எப்போது கூட்ட வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க நேரிடும்.
ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதற்காக எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள ஹர்த்தால் நடவடிக்கையினை 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஹர்த்தால் நடவடிக்கை போன்று மாற்றியமைக்க கூடாது என்றார்.
1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹர்த்தால் இலங்கையின் வரலாற்றில் முக்கியத்துவமிக்க ஒன்றாக விளங்கியது. அன்றைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்டப்பட்ட ஹர்த்தால் காரணமாக நாட்டில் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்ததுடன், நாடு மோசமாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அக்காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி அரசு ஆட்சி செலுத்தியதுடன் ,பிரதமராக மறைந்த டட்லி சேனாநாயக்க விளங்கினார் . பின்னர் அவர் மனமுடைந்து தனது பதவியை இராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வைத்திய வைத்திய ஆய்வு கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில்,
பலவீனமான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சுகாதார சேவை மேலும் பாதிக்கப்படும் என்பதால் பணிபுறக்கணிப்பில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சுகாதார சேவை தரப்பினர் இன்றைய தினம் சேவை நிலையங்களில் கறுப்பு கொடி ஏற்றப்படுவதுடன் சேவைக்க கறுப்பு நிறத்திலான உடையில் சமுகமளிப்போம் என தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]