நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவினை வழங்கவில்லை என்றும் மாறாக பிறிதொரு தினத்தில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் நிதிமன்றம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று (18) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலை வைக்கப்பட்டது.
அந்த சிலையினால் போக்குவரத்திற்கு இடையூறு எனவும், மதங்களுக்கு இடையில் முரண்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உண்டு எனவும் அதனால் அந்த சிலையை அகற்ற நீதிமன்றில் பொலிசார் அனுமதி கோரியிருந்தனர்.
எனினும் இவ்வாறு அனுமதி கோருவவதற்கு பொலிசாருக்கு அதிகாரங்கள் இல்லை என்பதை நீதிமன்ற சமர்ப்பணத்தில் குறிப்பிட்டிருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக வழக்கு எதிர்வரும் 04.05.2023 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.