பாகிஸ்தானில் கடந்த 1990-களில் நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி வகித்தபோது பிரிட்டன் தலைநகர் லண்டனில் முறைகேடாக ஆடம்பர வீடுகளை வாங்கியது ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணங்களில் அம்பலமானது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது 2 மகன்கள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக் குழு முன்பு நவாஸ் ஷெரீப் ஆஜராகி விளக்கம் அளித்தபோது, அவரது பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும் சிறப்புக் குழு சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த ஊழல் காரணமாக பிரதமர் நவாஸ் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றன. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது பிரதமர் நவாஸின் பதவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் சட்ட நிபுணர்கள் எச்சரித் துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் நவாஸ் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். ஊழல் வழக்கில் நவாஸ் பதவி விலக நேர்ந்தால் அடுத்து யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது 2 மகன்களும் மகளும் வழக்கில் சிக்கியுள்ளதால் அவர்களைப் பிரதமர் பதவியில் அமர்த்துவது கடினம்.
எனவே தனது சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீபை பிரதமராக்க நவாஸ் திட்டமிட்டிருப்பதாக ஆளும் பிஎம்எல்-என் கட்சியின் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.